மன்னார் பரப்பங்கண்டல் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றதாகவும் இதில் 10 படையினர் கொல்லப்பட்டதுடன் 40க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் படையினர் பரப்பங்கண்டல் பகுதியை நோக்கி பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் ஆட்லறி தாக்குதலுடன் முன்னேறியுள்ளனர்.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் முறியடிப்பு அணியினர் மேற்கொண்ட கடும் பதில் தாக்குதலில் படையினர் பின்வாங்கிசென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் மோதல் நிலை காரணமாக 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 80க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
பாப்பாமோட்டை முன்நகர்வு
இதேநேரம் மன்னார் பாப்பாமோட்டை பகுதி நோக்கி படையினர் மேற்கொண்ட படையினரின் முன்னநகர்வு முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை 8.20 மணியளவில் சேற்றுக்குழியூடாக இந்த முன்நகர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது விடுதலைப்புலிகளின் முறியடிப்பு அணியினர் மேற்கொண்ட கடும் பதில் தாக்குதலில் படையினர் பின்வாங்கிசென்றதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக 12 படையினர் கொல்லப்பட்டதுடன் 20க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த கடும் மோதலைத்தொடர்ந்து மன்னார் – மதவாச்சி வீதி காலை 10 மணியளவில் மூடப்பட்டதுடன் பெருமளவான அம்பியுலன்ஸ் வண்டிகள் அப்பகுதியில் படையினரை ஏற்றிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அம்பியுலன்ஸ் வண்டிகள் உயிலங்குளம் சந்தியூடாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தள்ளாடி முகாமுக்கு அடிக்கடி ஹெலிகொப்டர்கள் வந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.