ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கான பிரித்தானிய அமைச்சர் லோட் பிரவுனின் அறிக்கையில் இலங்கை பற்றிக் கூறப்பட்டுள்ள விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டவையெனவும் இது குறித்து இலங்கை தனது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். ஐ.நா. வின் மனித உரிமைகள் மாநாடு தற்போது ஜெனீவாவில் இடம்பெற்றுவருகிறது. இதில் ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையை பிரித்தானிய அமைச்சர் லோட் பிரவுன் சமர்ப்பித்து உரையாற்றினார். இது குறித்துக் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் இங்கு மேலும் கூறியுள்ளதாவது:
பிரித்தானிய அமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலங்கை குறித்த கருத்துக்கள் சரியான தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதன்று. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித நேய நடவடிக்கைகளின் போது மனித உரிமைகளைப் பேணிக் காப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள விடயங்கள் இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்படவில்லை.இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்து இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை தனது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கூறும் பிரித்தானிய அமைச்சர் பிரவுன், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முயற்சியின் போது இலங்கையின் பொதுமக்கள் சகலரையும் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எதுவும் குறிப்பிடாமை அதிருப்தியளிப்பதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா மாநாட்டில் மேலும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.