யாழ் தீவகம் ஊர்காவற்றுறை நாரந்தனை தம்பாட்டிப் பகுதியில் நேற்று இரவு 8.15 மணியளவில் தொலைத் தொடர்பு நிலைய
உரிமையாளர் ஒருவர் ஆயுததாரிகளால் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
சுடப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த இரத்தினசாமி வடிவேலு (வயது61) என்பவராவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை நீதிவான் திருமதி ஜோய் மகா தேவன் விசாரணைகளை நடத்தினார்.
மின் விநியோகம் தடைப்பட்ட நேரத்தில் ஆயுததாரிகள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த வடிவேலுவின் மனைவி, மகள், மருமகன் ஆகியோரை ஓர் அறைக்குள் செல்லுமாறு அச்சுறுத்தி கதவைப் பூட்டி விட்டு வெளியே வந்தனர் என்றும் அதன் பின்னர் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர் என்றும் விசாரணையில் தெரிவித்தனர்.
அச்சம் காரணமாக வெளியே செல்ல வில்லை என்றும் இரவு 10.00 மணியளவில் வெளியே வந்து பார்த்தபோது அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார் என்றும் உறவினர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது சடலத்துக்கு அருகில் இருந்து வெற்றுத்தோட்டா ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
தம்மை அடையாளம் காண்பதைத் தவிர்ப்பதற்காக, வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கை ஆயுததாரிகள் எடுத்து எறிந்தனர் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சடலத்தை யாழ். ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி நீதி வான் உத்தரவிட்டார்.