சிறிலங்கா சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளை சகிக்க முடியாமல் சிறிலங்காவை விட்டு வெளியேறுவது என்று அந்நாட்டின் புகழ்பெற்ற 6 மருத்துவர்கள் முடிவு
செய்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகப் புகழ்பெற்றவராகக் கூறப்படும் நரம்பியல் வல்லுநரான சுனில் பெரேரா மற்றும் ஐந்து புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்கள் முடிவு செய்துள்ளனர்.
சுகாதார அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வாவின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளுக்கு இந்த வல்லுநர்கள் ஆதரவாக இருக்கவில்லை என்று தெரிகிறது.
பெரும்பாலான மருத்துவர்கள் நேரம் பார்க்காமல் பணிபுரிந்தும் அதற்குப் பலனாக அமைச்சரிடமிருந்து சித்ரவதைகளையே அனுபவிகக் நேரிடுகிறது என்று ஒரு மருத்துவர் தெரிவித்தார்.
"பிற நாடுகளில் மருத்துவர்களைப் போற்றுகிறார்கள் எனில் சிறிலங்காவிலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. எமது பணி சேவை என்பதால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை.
ஐரோப்பிய நாடு எனில் நாம் தற்போது பெறும் ஊதியத்தை விட இரு மடங்கு பெற முடியும்" என்றும் அந்த மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சருக்கென சில எல்லைகள் உண்டு. ஆனால் மருத்துவத்துறையின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் அவர் தலையிடுகிறார் என்றும் அந்த மருத்துவர் குற்றம்சாட்டினார்.
இதனிடையே மருத்துவ வல்லுநர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடை செய்யும் வகையில் சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மருத்துவ வல்லுநர்களுக்கு விசாக்களை வழங்கக் கூடாது என்று நிமல் சிறிபால டி சில்வ அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.