இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்- இந்தியாவை அல்ல என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் சோசலிச பெண்கள் ஒன்றியத்தின் சார்பில் கொழும்பில் நேற்று சனிக்கிழமை உலகப் மகளிர் நாள் நிகழ்வு நடைபெற்றது.
அகில இந்திய போர்வார்ட் பிளக் பிரதிநிதி சித்ரா கோஷ் சிறப்புப் பிரதிநிதியாக அந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
நிகழ்வில் சோமவன்ச அமரசிங்க பேசுகையில், நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல. இந்த அரசாங்கம்தான் எம்மை இந்தியாவுக்கு எதிரான ஒரு கட்சியாக சித்தரிக்கிறது என்று கூறிவிட்டு, "உங்கள் நாட்டுக்கு நாங்கள் எதிரியா?" என்று சித்ரா கோஷிடம் கேட்க சித்ரா கோசும் சிரித்துக் கொண்டே "இல்லை" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள "பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தினரையே நாங்கள் எதிர்க்கிறோமே தவிர இந்தியாவுக்கு எதிராக இல்லை" என்று கூறினார்.
மேலும், மக்களை தவறாக வழிநடத்துகிற பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை நான் வெறுத்து ஒதுக்குகிறேன். இந்த நாட்டைப் பாதுகாக்க படையினர் மடிந்து கொண்டிருக்கும் போது இந்த நாட்டினது அனைத்துத் தலைவர்களும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்" என்றார் அவர்.