நுகேகொடை வழியாகப் பயணித்த பஸ் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியினால் அப்பகுதி முழுவதும் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரகம்பிட்டிய ஹெட்டியாவத்தை நோக்கிப் பயணிக்கும் 176 ஆம் இலக்க பஸ் வண்டி ஒன்றினுள்ளேயே மேற்படி சந்தேகத்திற்கிடமான பொதி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி பொதி காரணமாக அந்த பஸ் வண்டி நுகேகொடை ஹைலவல் வீதியில் வெகு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் பஸ்ஸில் இருந்த பயணிகளும் விரைவாக இறக்கப்பட்டனர்.
இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து குண்டு செயலிழக்க வைக்கும் படையினருடன் அவ்விடத்திற்கு விரைந்த மிரிகானை பொலிஸார் சந்தேகத்திற்கிடமான பொதியை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அவர்களின் சோதனையை அடுத்து அந்த சந்தேகத்திற்கிடமான பொதியினுள் எவ்வித குண்டுகளோ அல்லது வேறு ஏதும் பொருட்களோ காணப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதியில் நிலவிய பதற்றம் நீங்கியது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஸ்தம்பிதமடைந்திருந்த போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.