இலங்கையில் தற்போதும் சித்திரவதைகள் பரவலாக இடம்பெறுகின்றன. அரசாங்கத்தின் அவசர காலச் சட்டம் இதனை ஊக்கவிப்பதாக உள்ளதாக சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா. வின் விசேட தூதுவர் மான் பிறெட் நொவெக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்ஸினில் 7 ஆவது கூட்டத தொடருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே நொவெக் இக் குற்றஞ்சாட்டை முன்வைத்துள்ளார்.
சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா. வின் விசேட தூதுவர் மான்பிறெட் நொவெக் கடந்த வருடம் ஒக்டோபர் முதல்வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சித்திரவதைகள் தொடர்பாக அதிக எண்ணிக்கையான அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரணைக்காக ஏற்றுள்ளது.
இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இது தொடர்பான பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் சித்திரவதைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் இது தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் கிடைத்த வண்ணம் உள்ளன.
சித்திரவதைகளை தடுப்பதற்கு அரசாங்கங்கம் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனினும் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தல் போன்ற அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் அவற்றை ஊக்குவிப்பதாக உள்ளன. சித்திரவதைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கையில் ஐ.நா. வின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பை நிறுவுவது சிறந்த பெறுபேற்றைக் கொடுக்கும்.