மட்டக்களப்பு மாவட்டத்தின் நாளைய உள்ளுராட்சி மன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தின் மூலைமுடுக்கெல்லாம் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டகளப்பில் இருந்து கல்முனை வரையான நெடுஞ்சாலையும் மட்டக்களப்பில் இருந்து பொலநறுவை வரையான நெடுஞ்சாலைகளும் கடும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் படுவாங்கரை பிரதேசம் முற்றிலும் இராணுவ மயப்படுத்தப்பட்டதாகவே உள்ளது.
இங்கு சந்திக்கு சந்தி விசேட அதிரப்படையினர் தேடுதலில் ஈடுபட்டுவருவதுடன் பிரதான வீதிகளில் பல இடங்களில் வாகனங்கள் மறிக்கப்பட்டு கடும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீண்ட நாட்களுக்கு பின்னர் கவச வாகனங்களில் படையினர் தீவிர ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினர் கடும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பிரதான வீதிகளில் வாகனங்களில் செல்வோர் பெரியகல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் இறக்கப்பட்டு கடும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர்;.
மோட்டார் சைக்கிளில் செல்வோர் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன் மோட்டார் சைக்கிளும் பலத்த சோதனைக்குட்படுத்தப்படுகின்றது.
இதேநேரம் உள்ளுராட்சிமன்ற தேர்தலின்போது மட்டக்களப்பு நகரில் பல இடங்களில் படையினரை இலக்குவைத்து கிளேமோர் தாக்குதல் நடத்த தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தேடுதல் நடத்திய விசேட அதிரடிப்படையினர் மட்டக்களப்பு பாவடிச்சேனை பகுதியில் இலக்குவைக்கப்பட்டிருந்த கிளேமோர் குண்டு ஒன்றை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.