சிறிலங்காவின் தென்பகுதியில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் படையினரின் வளத்தையும், பொருளாதரத்தையும் சீரழித்து வருகின்றது. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் தென்பகுதியில் தாக்குதல்களை அதிகரிப்பதன் பிரதான நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:
விடுதலைப் புலிகள் சனிக்கிழமை கல்கே பகுதிக்கு அண்மையில் உள்ள கதிர்காமம் - புத்தள வீதியில் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. உழவூர்தியில் மூன்று இராணுவத்தினரும், மூன்று கொமோண்டோக்களும் பயணம் செய்த போது இத்தாக்குதல் இடம்பெற்றது.
கிளைமோர்த் தாக்குதலைத் தொடர்ந்து படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். இதன் போது 200 சுற்று ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உழவூர்தியின் இயந்திரத்தின் சக்கர பாதுகாப்பு கவசத்தில் அமர்ந்திருந்த இராணுவ சார்ஜனே இத்தாக்குதலில் உயிரிழந்தவர் ஆவார்.
தற்போது அப்பகுதிகளில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் ஆழமான சிறிலங்காவின் தென்பகுதியினை சீர்குலைக்க முடியும் என்பதனை விடுதலைப் புலிகள் மீண்டும் நிரூபித்திருக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் நாள் புத்தளப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதுடன் 63 பேர் காயமடைந்திருந்தனர். அதன் பின்னர் அப்பகுதியில் இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் மேலும் 15 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது அப்பகுதியில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நேற்று இடம்பெற்ற தாக்குதல் அப்பகுதி கிராம மக்களிடம் அச்சத்தையும், பீதியையும் அதிகரித்துள்ளது. விடுதலைப் புலிகளை அப்பகுதியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளில் படையினர் தோல்வி கண்டுள்ளதையே நேற்றைய தாக்குதல் எடுத்துக்காட்டியுள்ளது.
முன்னைய தேடுதல்கள் தோல்வியில் முடிவடைந்தது அப்பகுதியின் படையினரின் பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதனை காட்டுகின்றது. இது அதிகம் செலவுகளை எற்படுத்தலாம். இதுவே விடுதலைப் புலிகள் தென்பகுதியின் தாக்குதல்களை அதிகரிப்பதன் பிரதான நோக்கம்.
வேறு பகுதிகளில் நடைபெறும் இதே போன்ற தாக்குதல்களும் அதிக படையினரை உள்வாங்கலாம். இது படையினருக்கு மிகவும் சவாலான விடயம்.
ஆழமான சிறிலங்காவின் தென்பகுதியை விட கொழும்பையும் தாக்கும் திட்டங்களை விடுதலைப் புலிகள் முதன்மைப்படுத்தி வருகின்றனர். எனினும் வன்னிக் களமுனை தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் நாள் படையினர் மடுவை நோக்கிய தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். அது தற்போதும் தொடர்கின்றது. ஆனால் மடுவையும், விடத்தல்தீவையும் கைப்பற்றும் தமது இலக்குகளை படையினர் இன்றுவரை அடையவில்லை.
இரு வாரங்களில் மடுவைக் கைப்பற்றி விடுவதாக படையினர் கடந்த மாதங்களில் தெரிவித்திருந்தனர். எனினும் அவர்களின் காலக்கெடுக்கள் கடந்து விட்டன.
இந்நிலையில் இந்த படை நடவடிக்கைகளை வழிநடத்தி வரும் இரு உயர் இராணுவ அதிகாரிகளான வவுனியா மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய மற்றும் 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெகத் டயஸ் ஆகியோர் கடந்த புதன்கிழமை கொழும்புக்குச் சென்று பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.
மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளில் இடம்பெற்று வரும் மோதல்களை விட முகமாலையிலும் படையினர் அடிக்கடி மோதல்களில் ஈடுபட்டு வரகின்றனர். எனினும் அப்பகுதிகளில் நடைபெறும் படை நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படுவதில்லை.
இதனிடையே கடந்த மாதம் 104 படையினர் கொல்லப்பட்டதாகவும் 822 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது அமைச்சர் நிமல் சிறீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
இக்காலப்பகுதியில் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 201 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
எனினும் காணாமல் போன படையினர் தொடர்பாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை எவ்வளவு? என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.