கனடாவிற்கு எதிர்வரும் சனிக்கிழமை (15.03.08) செல்லவுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை:
எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் நாள் Can Indo Lanka என்ற அமைப்பு தமிழினப் படுகொலையை அரங்கேற்றி வரும் சிறிலங்கா அரசின் தூதரகத்தின் ஆதரவோடு 2008 CSL Awards Gala என்ற நிகழ்ச்சியை Double Tree International Hotel, Toronto இல் நடத்த இருக்கிறது.
சிறிலங்கா சுற்றுலா அவை (Sri Lanka Tourist Board) மற்றும் சிறிலங்கா முதலீடுகள் அவை (Board of Investments of Sri Lanka) ஆகியனவும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குகின்றன.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க அழைக்கப்பட்டுள்ளார். அவரது வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் உட்பட பல சமூக அமைப்புக்களும் ஊர்ச்சங்கங்களும் முன்னின்று நடத்துகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசு தமிழர்கள் மீது ஒரு கொடிய இன அழிப்புப் போரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வைக்குப் பின்னால் ஒரு இனப் படுகொலையை (genocide) மகிந்த ராஜசபக்சவின் அரசு அரங்கேற்றி வருகிறது. அந்த அரசினால் அர்ஜூன ரணதுங்க சிறிலங்கா துடுப்பாட்ட அவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அர்ஜூன ரணதுங்க ஒரு கடைந்தெடுத்த சிங்களப் பேரினவாதி எனப் பெயர் எடுத்தவர். சிங்கள இனவாத சக்திகளுடன் கைகோர்த்துக்கொண்டு நிற்பவர். பிபிசி மற்றும் செய்தித்தாள்களுக்குச் பலமுறை செவ்வி கொடுத்த அர்ஜூன ரணதுங்க, தான் தேசப்பிரேமி ஜனதா அமைப்பின் (Patriotic National Front (PNF) வளர்ச்சிக்குத் தொடர்ந்து உழைக்கப் போவதாகக் கூறயிருக்கிறார்.
தேசப்பிரேமி அமைப்பு சிங்கள - பெளத்த - பேரினவாத ஜாதிக விமுக்தி பெரமுன அமைப்பின் முன்னணி (front) அமைப்பாகும். தேசப்பிரேமி ஜனதா அமைப்பு சுதந்திரக் கட்சி, ஜாதிக விமுக்தி பெரமுன போன்ற கட்சிகளின் உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், மனிதவுரிமை அமைப்புக்கள், போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அமைப்புக்கள் போன்றவற்றுக்கு எதிராகச் செயல்பட சிங்கள எழுத்தாளர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள், கமக்காரர்கள், ஆசிரியர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை அணிதிரட்டும் பணியைச் செய்கிறது.
இந்த அமைப்பு முன்னர் கருணா கூலிப்படையை ஆதரித்தது. இப்போது பிள்ளையான் கூலிப்படைக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.
சிறிலங்கா ஒட்டாவா தூதரகம் Can Indo Lanka என்ற அமைப்பு ஊடாகக் கனடியத் தமிழர்கள் இடையே எட்டப்பர்களை வலைவீசிப் பிடிக்கு முகமாக பத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு விருதுகளை தமிழ் மக்களின் குருதி நனைந்த அர்ஜூன ரணதுங்கவின் கையினால் வழங்க முன்வந்துள்ளது. ஆனால் அந்த விருதுகளை வாங்க சம்பந்தப்பட்டவகள் மறுத்து விட்டதாகத் தெரிகிறது. மீறிக் கலந்து கொள்வோர் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கலாம்.
அண்மையில் பிரித்தானியாவில் இருந்து 6 தமிழ் எட்டப்பர்களையும் 3 முஸ்லிம் பிரமுகர்களையும் சிறிலங்கா வெளியுறவு அமைச்சு வரியிறுப்பாளர் செலவில வரவழைத்து கலதாரி ஹோட்டலில் தங்கவைத்து ஒரு கிழமையாக நாட்டைச் சுற்றிக்காட்டிவிட்டு திருப்பி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.