போலியான பல பீரங்கிகளைப் பயன்படுத்தி சிறிலங்கா வான் படையினரின் வான் கண்காணிப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் குழப்பி வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:
கடந்த செப்ரெம்பர் மாதம் உயிலங்குளம் சோதனைச் சாவடி மூடப்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் 22 ஆம் நாள் படையினர் உயிலங்குளம் - ஆண்டான்குளம் வீதியை நோக்கி படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். அந்த வீதியில் உள்ள 2.5 கி.மீ தூரத்தை கடப்பதற்கு படையினருக்கு 3 மாதங்கள் எடுத்துள்ளது.
தற்போது படையினர் மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய அரை வட்டவடிவில் அடம்பன் பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.
எனினும் அடர்ந்த காட்டுப்பகுதி பொறிவெடிகள் அபாயம் உள்ளது. விடுதலைப் புலிகளின் தகவல்களின் படி அங்கு குறிசூட்டுப் படையணிகளையும் அவர்கள் பெருமளவில் களமிறக்கியுள்ளனர்.
இராணுவத்தினருக்கு ஆதரவாக தற்போது எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மார்ச் 5 ஆம் நாள் நடைபெற்ற சமர்களிலும் அவை ஈடுபட்டிருந்தன.
இடம்பெற்று வரும் ஈழப்போரில் வான்படையினர் அதிக தொலைவில் பறக்கும் வானூர்திகளைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் மற்றும் கட்டளை மையங்களை தாக்கி அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய மிகையொலி வானூர்திகளை ஏவுகணைகள் மூலம் குறிவைப்பது கடினமாகும்.
எனினும் 1995 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இரு அவ்ரோ வானூர்திகளை விடுதலைப் புலிகள் சுட்டுவீழ்த்திய பின்னர், எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளையும் சுட்டு வீழ்த்தியிருந்தனர். கடந்த ஆண்டு குடும்பிமலைப் பகுதியில் இருந்து படையினர் சாம்-14 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை கைப்பற்றியிருந்தனர்.
ரஷ்யத் தயாரிப்பான இந்த ஏவுகணை 4,500 மீ தூரவீச்சுடையதுடன் அதன் அதிகூடிய தாக்குதல் உயரம் 3,000 மீ ஆகும். மனிதரால் காவிச்செல்லப்படும் இந்த ஏவுகணையின் தாக்குதல் வீச்சு அதிகரிக்கப்படக்கூடியது. தாழ்வாகப் பறக்கும் தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் வானூர்திகளைச் சுட்டு வீழ்துவதற்கு என்று இது வடிவமைக்கப்பட்டது. அதன் உந்துகணை இலக்குகளை தேடிச் சென்று தாக்க வல்லது.
சாம்-7 ரக ஏவுகணையின் நவீன வடிவமான சாம்-14 ரக ஏவுகணை நைதரசன் குளிரூட்டப்பட்ட சல்பைட் உணர்திறன் உள்ளது. அது வானூர்திகளின் இயந்திரப்பகுதியை தேடிச் செல்லக்கூடியவை. அதிக விசாலமான கோணங்களிலும் தாக்கும் வலிமையுடைய இந்த ஏவுகணைகள், ஏவுகணை எதிர்ப்புச் சாதனங்களையும் முறியடிக்கும் வல்லமையுடையது.
ஏவுகணை எதிர்ப்பு ஒளிப்பிளம்புகளின் வெப்பத்தினை உறிஞ்சும் சாதனங்களையும் உடையது. சாம்-7 ரக ஏவுகணையின் உந்துகணைகளை விட சாம்-14 ஏவுகணையின் உந்துகணை இரு மடங்கு நிறையுடையது. இலத்திரனியல் வழிகாட்டிகள் அதன் எடையை குறைத்ததுடன், திண்ம எரிபொருள் மோட்டார்களும் அதன் சிறப்பம்சமாகும்.
இதனிடையே தாழ்வாகப் பறக்கும் தாக்குதல் உலங்குவானூர்திகள் சிறிய ஆயுதங்களின் தாக்குதலுக்கும் உள்ளாகக் கூடியவை. எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளை ஒத்த அமெரிக்காவின் பிளக்ஹவாக் தாக்குதல் உலங்குவானூர்திகள் சிறிய ஆயுதங்களின் மூலம் ஈராக்கிலும், சோமாலியாவிலும் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன.
எனினும் தற்போதைய நவீன எம்ஐ-24 ரக உலங்கவானூர்திகள் மிக நவீன ஏவுகணை எதிர்ப்புச் சாதனங்களை கொண்டிருப்பது அனுகூலமானது.
எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகள் மன்னாரில் தாக்குதலில் ஈடுபட்ட போது மிகையொலி வானூர்திகள் பூநகரிப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டிருந்தன. இந்தப் பகுதியில் இருந்தே விடுதலைப் புலிகள் 152 மி.மீ பீரங்கிகள் மூலம் பலாலி கூட்டுப்படைத் தளம் மீது தாக்குதலை நடத்தியிருந்தனர்.
தாக்குதலின் பின்னர் உழவு இயந்திரங்களின் உதவியுடன் பீரங்கிகளை விடுதலைப் புலிகள் நகர்த்தி விடுவதுண்டு. படையினரிடம் அவற்றினை கண்டறியும் சாதனங்கள் உண்டு. இந்தப் பீரங்கிகளை விடுதலைப் புலிகள் நிலத்தடி பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்பாக வைப்பதுண்டு. மேலும் படையினரைக் குழப்பும் நோக்கத்துடன் போலியான பல பீரங்கிகளையும் அவர்கள் பயன்படுத்துவதுண்டு.
இதனிடையே கடந்த மாதம் இடம்பெற்ற மோதல்களில் 104 படையினர் கொல்லப்பட்டதாகவும் 882 பேர் காயமடைந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது. அவசரகாலச் சட்ட நீடிப்பின் போது அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 201 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த ஆண்டின் முதல் 42 நாட்களில் 180 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 270 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் இறப்பைக் கருதினால் கிழமைக்கு 30 பேர் கொல்லப்படுகின்றனர்.
எனினும் அமைச்சர்களால் வெளியிடப்பட்ட தகவல்களில் இவை சேர்க்கப்படவில்லை. ஜனவரி மாதம் இடம்பெற்ற மோதல்களில் 68 படையினர் கொல்லப்பட்டதாதகவும், 468 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தார். இந்தக் காலப்பகுதியில் 73 பொதுமக்களும் கொல்லப்பட்டதுடன் 110 பேர் காயமடைந்திருந்தனர்.
அரசின் தகவல்களின் பிரகாரம் கடந்த இரு மாதங்களில் 172 படையினர் கொல்லப்பட்டதுடன் 1,300 பேர் காயமடைந்துள்ளனர். இந்தக் காலப்பகுதியில் 153 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 311 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.