இலங்கையில் மனித உரிமைகளை ஆராய ஐ.நா. வின் அலுவலகம் அமைக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதனை எம்மால் மேற்கொள்ள முடியும்.அரசாங்கம் ஐ.நா. விற்கு அடிபணிந்து இதற்கு இடமளிக்குமானால் அதனை முழு மூச்சுடன் எதிர்த்து தடுக்கும் சக்தி ஜே.வி.பி. க்கு உண்டு என அதன் பிரசாரச் செயலாளரும் எம்.பி. யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஐ.நா. வின் மனித உரிமை அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டுமென்ற வலியுறுத்தல் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
எமது நாட்டில் ஐ.நா. அலுவலகம் அமைப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கம் அதனை நிறைவேற்ற முயன்றால் தேசப்பற்றாளர்களை ஒன்றிணைத்து அர்ப்பணிப்புடன் போராடி தடுத்து நிறுத்துவோம். அதற்கான பலம், மனோதிடம் ஜே.வி.பி. க்கு உண்டு.
எமது நாட்டில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணை செய்ய ஜனநாயக ரீதியான அரசாங்கம் மக்கள் பிரதிநிதிகள் தேசிய ஜனநாயக அமைப்புக்கள் இருக்கின்றன. எனவே அந்தப் பொறுப்பை வேறொருவருக்கு அதாவது சர்வதேச நாடுகளுக்கு வழங்க வேண்டிய அவசியம் கிடையாது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. வின் பிரதிநிதிகளான லூயிஸ் ஆர்பர், அநா??? போன்றோர் அறிக்கைகளை சமர்ப்பித்து அதனூடாக இங்கு வந்து அலுவலகத்தை அமைப்பார்கள். இதன் பின்னர் இலங்கையில் பயங்கரமான சூழ்நிலை தோன்றுவதாக பிரசாரத்தை மேற்கொண்டு சமாதானப் படை என்ற பெயரில் ஐ.நா. ஆக்கிரமிப்பு படையை எமது நாட்டில் நிலைகொள்ளச் செய்வார்கள். பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
இந்த ஸ்டைலிலேயே கொசோவாவில் நேட்டோ படையினரை நிலைகொள்ளச் செய்தும் சூடானில் ஐ.நா. படையை நிலைகொள்ளச் செய்தும் பிரிவினைகளை ஏற்படுத்தினார்கள். எனவே இதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். அதேவேளை இவ்விடயம் தொடர்பாக இந்தியா மௌனத்தை கடைப்பிடிக்கின்றது. அந்த மௌனம் இச் செயலுக்கு ஆதரவாக இருக்குமானால் அதனையும் எதிர்த்து போராடுவோம் என்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.