கொழும்பு வெள்ளவத்தையில் இன்று திங்கட்கிழமை காலை 06.45 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 4 பேர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளவத்தை ரொக்ஸி திரையரங்குக்கு முன்னாலுள்ள காலி வீதியில் உள்ள வீதியின் நடுப்பகுதியில் பூங்கன்றுகளுக்கு இடையில் குண்டு மறைத்து வைக்கப்பட்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இக்குண்டு பாரிய சத்தத்துடன் இக்குண்டு வெடித்துச் சிதறியது. குண்டுவெடிப்பை அடுத்து அப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரும், காவல்துறையினரும், படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடித்த இடத்திலிருந்து 150 மீற்றர் துாரத்திலேயே தென்னிலங்கையிலிருந்து கொழும்பை நோக்கி வருகின்ற வாகனங்கள் பரிசோதிக்கும் பிரதான இராணுவ செக் பொயின்ற் இருக்கிறது.
காலி வீதியூடான போக்குவரத்து வெள்ளவத்தைக்கும் தெகிவளைக்கும் இடையில் தடைப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் கடற்கரை வீதியூடாக திசைதிருப்பி விடப்பட்டு வருகின்றன.
எனினும் வீதியில் பெரும் வாகன நெரிசல் காணப்படுவதுடன் குண்டுவெடித்த பகுதிக்குச் செல்ல படையினர் உடனடியாக அனுமதி வழங்கவில்லை.
இக்குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 4 பேர் காயமடைத்திருப்பதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் நோயாளர் காவு வாகனங்களின் ஓட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது. காயமடைந்த அனைவரும் பாடசாலை மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த நால்வரும் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்த மேலதிக விபரங்கள் எதிர்பாக்கப்படுகின்றன.