மனித உரிமை விடயத்தில் ஐ.நா.வுடனும் சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராக உள்ளது. எனினும் இவ்விடயத்தில் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு தேவை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெனிவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை கவுன்சில் 7ஆவது கூட்டத்தொடலில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சரும் இலங்கை தூதுக்குழுவின் தலைவருமான மஹிந்த சமரசிங்க அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஐ.நா.வின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுவரும் நிலையில் இலங்கையும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பிற்கான எதிர்ப்பும் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்றை ஐ.நா.வுக்கான இலங்கை தூதுவரும் நிரந்தர வதிவிட பிரதிநிதியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க ஏற்பாடு செய்திருந்தார். கந்துரையாடலில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் அடங்கலாக சுமார் 45 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் கூறியதாவது: மனித உரிமைகள் விடயத்தில் அரசாங்கத்திடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நாம் மிகவும் வெளிப்படையான முறையிலேயே செயற்பட்டுவருகின்றோம்.
ஐ.நா.வின் உயர்மட்ட பிரதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது அவர்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
ஐ.நா,வின் மனித உரிமை ஆணையாளர் லூயில் ஆர்பர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவரின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். சென்று ஆயரை சந்தித்துப்பேசுவதற்கும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் சந்திப்பதற்கும் அரசாங்கம் ஏற்பாடு செய்தது.
அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா.வின் விஷேட தூதுவர் மான் பிறெட் நொவெக்கிள் கோரிக்கைக்கு அமைய முன் அறிவிப்பு எதுவுமின்றி சிறைகளையும் தடுப்பு நிலையங்களையும் சென்று பார்வையிடுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்தது.
ஐ.நா.வின் இடம் பெயர்ந்தோர் தொடர்பான விஷேட தூதுவர் வோல்ட்டர் கெவின் விஜயம் செய்த போது கிழக்கு மாகாணத்திற்கு சென்று இடம் பெயர்ந்த மக்களையும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் ஆய்வுசெய்வதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்தது. அரசாங்கம் இலங்கையிலுள்ள ஐ.நா.உயர் அதிகாரிகளுடனும் இங்கு விஜயம் செய்யும் ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தூதுவர்களுடனும் ஒத்துழைத்து செயற்படுகின்றது. “இந் நிலையில் இலங்கையில் மனித உரிமைகளின் நிலையை கண்காணிக்க சர்வதேச அமைப்பின் பிரசன்னம் அவசியமென நாம் கருதவில்லை என்றார்.