மன்னார் முன் அரங்கில் ஏறத்தாழ கடந்த ஒரு வருடமாக முன்னேற முடியாமல் ஒரு சில சதுரகிலோ மீற்றர் பிரதேசத்துக்குள் முடங்கிக் கிடக்கின்றது இலங்கை இராணுவப் படையணி.
இதனால் இலங்கையின் பாதுகாப்பு உயர்பீடத்தில் விசனமும் விரக்தியும் ஆதங்கமும் ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தோற்றுகின்றது. இந்தப் பின்னடைவைக் சமாளிப்பதற்காக அவசர இராணுவக் கூட்டுக்களை ஏற்படுத்தித் தம்மைப் பலப்படுத்தும் நோக்குடன் இராணுவத் தளபதிகள் அவசர அவசரமாக வெளிநாட்டுப் பயனங்களில் ஓடித்திருந்திருக்கின்றார்இதேசமயம் அரசின் பேரினவாதக் கொள்கையிலான ஆட்சி முறைமை சர்வதேச மட்டத்தில் அம்பலமாகி இருப்பதால் அதன் பெயர் உலகளவில் சீரழிந்து விட்டது.
அதேவேளை அரசின் மோசமான மனித உரிமை மீறல்களினாலும் சர்வதேச சமூகத்தில் இலங்கை அரசின் பெயர் கெட்டுப்போயும் விட்டது.''இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன்.படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கே. சிவநேசனின் அஞ்சலி நிகழ்வு நேற்று முன்தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய சமயமே நடேசன் இவ்வாறு குறிப்பிட்டார்."மன்னாரில் மட்டுமல்ல, வவுனியா, மணலாறு மற்றும் வடக்குக் களமுனைப் போரிலும் இப்படித்தான் நகர முடியாமல் முன்னேற இயலாமல் அரசுப் படைகள் முடக்கப்பட்டுள்ளன.'' என்றார் நடேசன்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வறுமையாலும் பட்டினியாலும் வாடிய மக்களுக்கு கூட்டுறவு முறைமை மூலம் உதவுவதில் முன்னின்றவர் சிவநேசன். மக்கள் இடம்பெயர்ந்த போது அவரும் சேர்ந்து இடம்பெயர்ந்தார். விமானக் குண்டு வீச்சுகளில் மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவுவதில் முன்னின்றவர் சிவநேசன்.கீழ்மட்டத்தில் உள்ள மக்களை கூட்டுறவுத் திட்டத்தின் மூலம் ஊக்குவித்து வாழ்க்கையில் மேம்படும் நிலைக்குத் தூக்கிவிட முடியும் என்று கருதிச் செயற்பட்டார் அவர்.தமிழர் தேசத்தின் விடுதலை மீது அவர் முழு நம்பிக்கை கொண்டிருந்தார்.தென்னிலங்கையின் நாடாளுமன்ற முறை மூலம் தமிழருக்கு விடிவு கிட்டாது என்று முழுமையாக நம்பிய சிவநேசன், எனினும் அந்த முறைமையின் பின்னடைவுகளை அந்த முறைமை ஊடாகவே சர்வதேசத்துக்கும் அம்பலப்படுத்தினார்.
தமிழர்களின் உரிமைக்காகவெளிநாடுகளில் குரல் எழுப்பியவர்.
தமிழ் மக்களின் அரசியல் குரல் அடக்கப்பட்ட போது அவர் வெளிநாடுகள் எல்லாம் சென்று தமிழர்களின் உரிமைக்காக முழக்கமிட்டுக் குரல் எழுப்பினார்.மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும் , தமிழீழ தேசத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பு. இவ்வாறான இழப்புகளின் மத்தியில் எமது விடுதலைப் போராட்டம் முழு வீச்சுடன் நகர்ந்து வந்துள்ளது.சிவநேசனை எனக்கு 20 வருடங்களுக்கு மேலாகத் தெரியும். இவர் இளம் வயதிலிருந்து புரட்சிகர எண்ணங்களுடனும் எமது விடுதலைக்கு அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வந்தார்.கூட்டுறவு வாழ்வின் ஊடாக தேசத்திற்கு பெரும் பங்காற்றினார். போராளிகளுடனும், மக்களுடனும் இணைந்து வாழ்ந்து வந்தவர்.தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு இரவு பகலாக உழைத்தவர். எமது விடுதலையை மிகவிரைவில் பெற்றுவிடுவோம் என்ற நிலையில் ஒரு விடுதலை வீரனாக வாழ்ந்தவர்.
திட்டமிட்ட படுகொலை
அரசு இவரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளது. இவ்வாறான படுகொலைகளினால் எமது தேசம் கலங்கியபோதும், மஹிந்தவின் படுகொலை நடவடிக்கைகளை எதிர்கொண்டு தேசியத் தலைவரின் தலைமையில் அணிதிரண்டு, தனியரசை நிறுவுவதே தமிழர்களுக்கு உள்ள ஒரே வழி.இவ்வாறு நடேசன் கூறினார்.
கிளிநொச்சியில் "ஏ 9" சாலையை அண்டியுள்ள கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், புலிகளின் மூத்த உறுப்பினர் கே.வி.பாலகுமாரன் ஆகியோரும் பங்குபற்றினர்.யாழ். மாவட்ட கூட்டுறவு சமாஜத்தின் தலைவர் சொலமன் எஸ்.சிறில்,புலிகளின் மகளிர் மேம்பாடு மற்றும் திட்டமிடல் பொறுப்பாளர் எஸ்.தமிழினி மற்றும் பல கூட்டமைப்பு எம்.பிக்கள் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஜெயானந்தமூர்த்தி,கே.கஜேந்திரன், ராஸின் முகமட் இமாம், பி.அரியநேத்திரன்,சிவநாதன் கிஷோர், சிவசக்தி ஆனந்தன், ஸி.சந்திரநேரு, கே.பத்மநாதன் ஆகியோரும் பங்குபற்றினர்.