மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபை தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியதாக கிழக்குச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் வாக்கு பதிவுகள் இன்று மாலை 4 மணிக்கு நிறைவடையும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு முடிவடைந்தவுடன் வாக்குபெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுச்செல்லப்படவுள்ளதுடன் தேர்தலின் முதலாவது முடிவை நள்ளிரவிற்கு முன்னர் வெளியிட உள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் 6 அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. 101 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 831 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். வாக்களிப்பதற்காக 2 இலட்சத்து 70 ஆயிரத்து 473 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
285 வாக்களிப்பு நிலையங்களிலும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக நிறுவப்பட்டுள்ள 10 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்குப் பதிவுகள் அமைதியான முறையில் நடைபெறுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபை,ஏறாவூர்பற்று பிரதேச சபை, கோறளைப்பற்று பிரதேச சபை,கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபை, மண்முனை பற்று பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை, மண்முனை தென் மேற்கு பிரதேச சபை, போரதீவு பற்று பிரதேச சபை ஆகிய ஒன்பது சபைகளுக்கான தேர்தலே இன்று நடைபெறுகின்றது.