வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கடந்த 8 ஆம் திகதி மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டாரென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்தள்ளது.
இவ்விஜயத்தின்போது அமைச்சர், சவூதி அரேபியா, குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்குச் செல்லவிருப்பதோடு, அங்கு தொழில் புரியும் இலங்கையர்களின் நலன்கள் குறித்து, அங்குள்ள இலங்கைத் தூதரகங்களினூடாக அறிந்து கொள்ளவுள்ளார்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுச் செல்லும் இலங்கையர்களுக்கு மத்திய கிழக்கில் மேலும் பல வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் இலங்கையுடன் மத்திய கிழக்கு நாடுகள் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தங்களுக்கான நகல்களையும் அமைச்சர் ஆராயவுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்தள்ளது.