சிங்கள குடியேற்றத்தின் உண்மையான தார்ப்பரியத்தை அர்த்தபரிமாணங்களில் எமது மக்களுக்கு எடுத்துக்கூறி தெளிவுறுத்தவேண்டிய தேவையும் கட்டுப்பாடும் இருக்கின்றது என தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் ‘தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்’ நூலுக்கு வழங்கியுள்ள வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
போராளி விபுலேந்திரன் அல்லது அன்புச்செல்வனின் ‘தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்’ நூல் வெளியாகியுள்ளது.
இதற்கு தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் வாழ்த்து செய்தியொன்றை வழங்கியுள்ளார்.
“மனிதன் என்பவன் உலக ஜீவராசியில் முதன்மையானவன்.அவன் இயற்கையென்ற மாபெரும் சக்திபடைத்த அற்புதமான கலைவடிவம். உயர்ந்த உயிர்வடிவம். இயற்கை மனிதனை இவ்வாறு படைத்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவன் தன்னைத்தானே படித்துக்கொள்ளவும் பாதுகாத்துக்கொள்ளவும் தனது இனத்தை விருத்திசெய்து தனது இனத்தின் இருப்பை இறுதிசெய்துகொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றது.
இந்த இயற்கையின் தவிர்க்கமுடியாத நியதிக்குள், நிர்ப்பந்தத்துக்குள் சிக்குண்டு மனித வாழ்வு சூழல்கின்றது.
இந்த சூழற்சியின் படிமங்கள் வாழும் மக்களின் அகத்திலும் புறத்திலுமாக பதிவாக்கம் செய்யப்படுகின்றன. அது அந்த மக்கள் கூட்டத்தின் சமூகத்தின்,இனத்தின் வரலாறாக விரிகின்றது.
இத்தகைய வரலாற்றின் ஒட்டுமொத்த பதிவுகள் அந்த இனத்தின் நிரந்தர நிம்மதியான இருப்புக்கு சாட்சியாக அவர்களின் கௌரவமான வாழ்வை அலங்கரித்து பெருமை சேர்க்கின்றது.
இலங்கைத்தீவில் ஏலவே வாழ்ந்த இனமொன்றின் மீது ஆக்கிரமிக்க நினைத்த இனமொன்றின் பரிநிர்மான துறவிகள் பின்புலமற்ற புனிதமான புனைவான வரலாறொன்றை வடிவமைத்து அதற்காகவே நிகழ் காலத்தை திரித்து மாலையாக்கி அவர்களே உறுவாக்கிய மாலையை அரச குலத்தாருக்கு சூட்டி மகிழ்ந்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக வாழ்ந்த இனத்தின் இருப்பின் அபிலாசைகளுக்கு வேட்டுவைக்கும் படியாக வரலாற்று நூல்களை ஆக்கி தமது வளரும் இளம் சந்ததியினருக்கு திணித்துவந்தார்கள். இத்தகைய திரிக்கப்பட்ட வரலாற்று திணிப்பின் விளைவாக சிங்கள இனம் இன்று பேரினவாத குழிக்குள் வீழ்ந்துகிடக்கின்றது.
இருண்டகால இதிகாசங்களின் கருத்துப்போர்வையால் உசுப்பேறி எமது தேசிய இன கட்டமைப்பை சிதைத்து எம்மை இனரீதியாக அழித்துவிட சிங்கள தேசம் நீண்டகாலமாக கங்கணம் கட்டிநிற்கின்றது. தமிழரின் தாயகம்,தேசியம்,தன்னாட்சி உரிமை எனும் மூலாதார கோட்பாடுகளுக்கு வேட்டுவைத்து வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான எமது தாயக மண்ணில் எம்மை அழித்துவிட திட்டம் போட்டது.
அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் தமிழீழ தமிழர் தாயக மண்ணில் சிங்கள குடியேற்றங்களை அமைத்து நில அபகரிப்பை ஆரவாரமின்றி அமைதியாகவும் காத்திரமாகவும் முன்னெடுத்தது. தமிழர்கள் விழித்துக்கொண்டபோது சிங்களப்படைகளையும் சிங்கள காடையர்களையும் நேரடியாக அனுப்பி எம்மக்களை அடியோடு அடித்துவிரட்டி எம்மக்களின் பிணக்குவியலின் மேல் குடியிருப்புகளை நிறுவிக்கொண்டது.
தமிழர்கள் இறுதியாக போராட ஆரம்பித்ததும் இராணுவ நடவடிக்கைகளையும் குண்டுவீச்சுகளையும் எறிகணை வீச்சுகளையும் பெரியளவில் தொடர்ச்சியாக மேற்கொண்டு தமிழர்களின் குடிமனைகளையும் குடியிருப்புகளையும் பெருமளவில் ஆக்கிரமித்தது. பலகோடி செலவில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தை குடியமர்த்தி பிரமாண்டமான இராணுவத்தளங்களை அமைத்து எமது தாயகத்தை நீண்ட இராணுவ வேலிகளால் முற்றுகையிட்டது.
இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கள குடியிருப்புகளை நிறுவி ,எமது தாயகத்தை பலகூறுகளாக துண்டாக்கி அதன் புவியியல் ஒருமைப்பாட்டை சிதைக்கமுனைந்தது. இப்படி அடாவடியாக முளைத்தெழுந்து இன்று பூதாகரமாக வடிவமெடுத்துள்ள இந்த சிங்கள குடியேற்றங்கள் இராணுவ குறிக்கோளும் அரசியல் ரீதியான அந்தரங்க நோக்கங்களும் கொண்டவை.
நாம் பிறந்து வாழ்ந்த எமது தாய் மண்ணிலேயே எமது இருப்புக்கு ஆப்புவைத்து எமது நிலங்களை பெரியளவில் வேகமாக விழுங்கிவருகின்றனர். இந்த குடியேற்றங்களின் உண்மையான தார்ப்பரியத்தை அர்த்த பரிமானங்களில் எமது மக்களுக்கு எடுத்துக்கூறி தெளிவூட்ட வேண்டிய தேவையும் கடப்பாடும் இன்று இருக்கின்றது.’