ஐ.நா. தான் விரும்பியதைப் போல இலங்கை மீது எதனையும் திணிக்க முடியாது. ஹியுமன் ரைட்ஸ் வோச் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள், இலங்கைக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. இலங்கையின் மனித உரிமையின் நிலைமைகள் மேம்பாடடைந்து வருகின்றன என அரசாங்க சமாதான செயலக பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.
ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 7 ஆவது கூட்டத்தொடர் மற்றும் அரசாங்க சமாதான செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் மாநாடு செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க மேலும் கூறியதாவது: இலங்கையில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அரசாங்கம் தூரநோக்குடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
அண்மையில் விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதன் முதற்படியாக அங்கு உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டது. தொடர்ந்தும் கிழக்கு மாகாணத்தில் சமூக, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளையும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருகட்டமாகவே கிழக்கு மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை சேர்க்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
மேலும், மொழி உள்ளிட்ட ஏனைய அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என அரசாங்கம் நம்புகின்றது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 7 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமான வேளையில் ஹியுமன் ரைட்ஸ் வோச் மற்றும் பிரபலமான நபர்களை கொண்ட சர்வதேச சுயாதீன ஆணைக்குழு என்பன இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அறிக்கைகளை வெளியிட்டன.