யாழ். அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக்குடியமரவும் தொழில் முயற்சியில் ஈடுபடவும் அனுமதிக்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் விவசாயியான காசிப்பிள்ளை யோகேஸ்வரன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முதற்கட்டமாக 3000 குடும்பங்களை மீளக்குடியமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இம்மூவாயிரம் குடும்பங்களினதும் காணி உறுதிகள் பரிசீலிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். அரச அதிபர் கே.கணேஷ், சட்டமா அதிபருக்கு அறிவித்திருப்பதாக அரச சட்டத்தரணி மன்றுக்குத் தெரிவித்தார். இதனைவிட மேலும் 6000 குடும்பங்கள் மீளக் குடியமர்வதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களது காணி உறுதிகள் யாழ். அரச அதிபரால் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் மன்றுக்குத் தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியால் நியமிக்கப்படும் ஒருவரையும் பாதுகாப்பு அமைச்சால் நியமிக்கப்படும் ஒருவரையும் கொண்ட குழுவினர் இம்மூவாயிரம் குடும்பங்களினதும் விண்ணப்பங்களை பரிசீலித்து அவர்களை உடனடியாக மீளக்குடியமர்த்துமாறு பிரதம நீதியரசர் சரத் என். சில்வா மற்றும் நீதியரசர்களான காமினி அமரதுங்க மற்றும் பாலபட்ட பெந்தி ஆகியோரைக் கொண்ட நீதியரசர் குழு உத்தரவிட்டது.
மனுதாரர்களான மாவை சேனாதிராஜா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகஈஸ்வரனுடன் சிரேஷ்ட சட்டத்தரணிகளான வி.எஸ். கணேசலிங்கம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் விவசாயியான காசிப்பிள்ளை யோகேஸ்வரன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சட்டத்தரணி தனபாலசிங்கம் ஜனகனுடன் ஆஜராகினர். அரச சார்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ரட்ணதிலக ஆஜரானார்.