குடியேற்றங்களின் உண்மையான தார்ப்பரியத்தை அர்த்த பரிமாணங்களில் எமது மக்களுக்கு எடுத்துக்கூறித் தெளிவூட்ட வேண்டிய தேவையும், கட்டுப்பாடும் இன்று இருக்கின்றது என்று தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
போராளி சி.விபுலேந்திரன் அல்லது அன்புச்செல்வன் எழுதிய "தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்" என்ற நூலுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் அளித்துள்ள வாழ்த்துச்செய்தி:
மனிதன் என்பவன் உலக ஜீவராசிகளில் முதன்மையானவன்.
அவன் இயற்கை என்ற மாபெரும் சக்தி படைத்த அற்புதமான கலை வடிவம். உயர்ந்த உயிர் வடிவம். இயற்கை மனிதனை இவ்வாறு படைத்ததோடு மட்டும் நின்று விடவில்லை அவன் தன்னைத்தானே படைத்துக்கொள்ளவும் பாதுகாத்துக்கொள்ளவும் தனது இனத்தை விருத்தி செய்து தனது இனத்தின் இருப்பை இறுதி செய்துகொள்ளவும் நிர்ப்பந்திக்கின்றது.
இந்த இயற்கையின் தவிர்க்க முடியாத நியதிக்குள் நிர்ப்பந்தத்திற்குள் சிக்குண்டு மனித வாழ்வு சுழல்கின்றது.
இந்தச் சுழற்சியின் படிமங்கள் வாழும் மக்களின் அகத்திலும் புறத்திலுமாக பதிவாக்கம் செய்யப்படுகின்றன.
அந்த மக்கள் கூட்டத்தின் சமூகத்தின் இனத்தின் வரலாறாக விரிகின்றன.
இத்தகைய வரலாற்றின் ஒட்டுமொத்த பதிவுகள் அந்த இனத்தின் நிரந்தர நிம்மதியான இருப்புக்குச் சாட்சியாக அவர்களின் கௌரவமான வாழ்வை அலங்கரித்து பெருமை சேர்க்கின்றது.
இலங்கைத்தீவில் ஏலவே வாழ்ந்த இனமொன்றின் மீது ஆக்கிரமிக்க நினைத்த இனம் ஒன்றின் பரிநிர்மாணத் துறவிகள் பின்புலமற்ற புனிதமான புனைவான வரலாறு ஒன்றை வடிவமைத்து அதற்காகவே நிகழ்காலத்தை திரித்து மாலையாக்கி அவர்களே உருவாக்கிய மாலையை அரச குலத்தாருக்கு சூட்டி மகிழ்ந்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக வாழ்ந்த இனத்தின் இருப்பியல் அபிலாசைகளுக்கு வேட்டு வைக்கும் படியான வரலாற்று நூல்களை ஆக்கித் தமது வளரும் இளம் சந்ததியினருக்கு திணித்து வந்தார்கள்.
இத்தகைய திரிக்கப்பட்ட வரலாற்றுத்திணிப்பின் விளைவாக சிங்கள இனம் இன்று பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்து கிடக்கின்றது.
இருண்ட கால இதிகாசங்களின் கருத்துப் போர்வையால் உசுப்பேறி எமது தேசிய இனக்கட்டமைப்பை சிதைத்து எமை இனரீதியாக அழித்துவிட சிங்கள அரசு நீண்டகாலமாக கங்கணம் கட்டி நிற்கின்றது.
தமிழரின் தாயகம், தேசியம் தன்னாட்சி உரிமை எனும் மூலாதாரக்கோட்பாடுகளுக்கு வேட்டு வைத்து வரலாறு ரீதியாக எமக்கு உரித்தான எமது தாயக மண்னில் எம்மை அழித்துவிடத் திட்டம் போட்டது.
அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் தமிழீழத் தமிழர் தாயக மண்ணில் சிங்களக்குடியேற்றங்களை அமைத்து நில அபகரிப்பை ஆரவாரமின்றி அமைதியாகவும் காத்திரமாகவும் முன்னெடுத்தது.
தமிழர்கள் விழித்துக்கொண்ட போது சிங்களப் படைகளையும் சிங்களக் காடையர்களையும் நேரடியாக அனுப்பி எமது மக்களை அடியோடு அடித்து விரட்டி எம் மக்களது பிணக்குவியலின் மேல் குடியிருப்புக்களை நிறுவிக்கொண்டது.
தமிழர்கள் இறுதியாகப் போராட ஆரம்பித்ததும் இராணுவ நடவடிக்கைகளையும் குண்டு வீச்சக்களையும் எறிகணை வீச்சுக்களையும் பெரியளவில் தொடர்ச்சியாக மேற்கொண்டு தமிழரின் குடிமனைகளையும், குடியிருப்புக்களையும் பெரியளவில் ஆக்கிரமித்தது.
பல கோடி செலவில் பல்லாயிரம் இராணுவத்தை குடியமர்த்தி பிரமாண்டமான இராணுவத்தளங்களை அமைத்து. எமது தாயகத்தை நீண்ட இராணுவ வேலிகளால் முற்றுகையிட்டது.இராணுவப் பாதுகாப்பிற்கு மத்தியில் சிங்களக் குடியிருப்புக்களை நிறுவி எமது தாய்நிலத்தை பல கூறுகளாகத்துண்டாடி அதன் புவியியல் ஒருமைப்பாட்டை சிதைக்க முயற்சித்தது.
இப்படி அடாவடியாக முளைத்தெழுந்து இன்று பூதாகாரமாக வடிவம் எடுத்துள்ள இந்தச் சிங்களக்குடியேற்றங்கள் இராணுவக் குறிக்கோளும் அரசியல் ரீதியான அந்தரங்க நோக்கங்களும் கொண்டவை.
நாம் பிறந்து வாழ்ந்த எமது தாய் மண்ணிலேயே எமது இருப்புக்கு ஆப்பு வைத்து எமது நிலங்களை பெரியளவில் வேகமாக விழுங்கி வருகின்றன. இந்தக்குடியேற்றங்களின் உண்மையான தார்ப்பரியத்தை அர்த்த பரிமாணங்களில் எமது மக்களுக்கு எடுத்துக்கூறித் தெளிவூட்ட வேண்டிய தேவையும் கட்டுப்பாடும் இன்று இருக்கின்றது.
எமது போராளியான சி.விபுலேந்திரன் (ரவி) இந்தத் தேவைகளையும் கட்டுப்பாடுகளையும் கவனத்தில் எடுத்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி "தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்" என்ற நூலை எழுதி வெளியிடுவது எனக்குப் பெரும் மகிழ்வைத் தருகின்றது.
சிங்கள அரசு தாயக மண்ணில் காலத்திற்கு காலம் நிகழ்த்திய மண் பறிப்பையும் நில ஆக்கிரமைப்பையும் அதன் ஆழ அகலங்களில் கால வரிசைப்படி தரிசித்துக் கதையாக கூறும் ஓர் உயர்ந்த வரலாற்று நூலாக இது அமைந்திருக்கின்றது.
நிலங்களைப் பறிகொடுத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் பெரும் நெருக்கடிகளையும் பெரும் வாழ்வியல் சுமைகளையும் பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக்காட்டும் காலப்பெட்டகமாக இது எழுதப்பட்டிருக்கின்றது.
சிங்கள அரசின் நில அபகரிப்பு நாடகத்தின் இன்றைய கொடூரமான வடிவத்தையும் அது தமிழின ஆன்மாவில் விழுத்தியுள்ள நிரந்தர வடுவையும் அங்குலமங்குலமாக ஆழமாக அலசிப்பார்த்து விலாவாரியாக இந்நூல் விளக்குகின்றது.
மொத்தத்தில் இது கனமான ஒரு காலப்பதிவேடாக எல்லோருக்கும் விளங்கும் எளிய மொழி நடையில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
தமிழீழ வரலாற்றில் இந்நூல் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துவதோடு இந்நூலின் ஆக்கத்திற்கு அயராது உழைத்த இந்த போராளிப் படைப்பாளியை நான் மனமாரப் பாரட்டுகின்றேன்.
அத்தோடு இவரது வரலாற்றுப்பணி தொடர்ந்தும் சிறக்க எனது நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தமிழீழத் தேசியத் தலைவர் தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.