திருகோணமலைக்கும் மூதூருக்கும் இடையில் ஆபத்தான பயணங்களில் மக்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஈடுபடுத்தி வருவதாக குறறம் சாட்டப்பட்டுள்ளது
திருமலைக்கும் மூதூருக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த இலங்கை துறை முக அதிகார சபைக்குச் சொந்தமான சேருவில 2 என்ற பயணிகள் கப்பல் திருத்த வேலைகளுக்காக கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் எனினும் பல மாதங்கள் கழிந்த நிலையிலும் இதுவரை அந்த கப்பல் திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது திருகோணமலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான மடுமை என்ற கப்பலே பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது
இந்த கப்பல் பயணிகள் போக்குவரத்திற்கு ஏற்புடையதல்ல என்பதால் காப்புறுதி கூட பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் எனினும் அதனை ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு மக்களின் போக்குவரத்திற்கு தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
60 பேர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய இந்த கப்பலில் 100;ற்கும் அதிகமானவர்கள் ஏற்றப்பட்டு ஆபத்தான கடல் பயணங்கள் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ஆனந்த ராணி என்ற மற்றுமொரு பாதுகாப்பற்ற கப்பல் திருகோணமலை மாவட்ட நீதிபதி பயணம் செய்த வேளை நடுக்கடலில் பழுதடைந்தததாகவும் அதனை அடுத்து அந்த கப்பலை பயன்படுத்த வேண்டாம் என நீதிபதி தடை உத்தரவினை பிறப்பித்ததாகவும் தெரியவந்துள்ளது
இதனை அடுத்தே மடுமை என்ற கப்பலை ஸ்ரீலங்கா அரசாங்கம் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது