மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு செயற்பாடு என்று சிறிலங்கா அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட இளந்திரையன், நான் மட்டக்களப்பு மண்ணின் மைந்தன். துணை இராணுவக் குழுவின் ஆதரவுடன் இந்த அரசாங்கத்தால் மட்டக்களப்பு களங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
இத்தேர்தலில் பிள்ளையான் குழு பெற்றுள்ள வெற்றியின் மூலம், விடுதலைப் புலிகள் அமைப்பு மேலும் பலவீனப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருப்பது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இளந்திரையன், அது தவறான கருத்து என்று மறுத்தார்.
"இது ஒரு ஜனநாயக நடவடிக்கையாக அமைந்திருக்கவில்லை. இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு செயற்பாடாகவே இது அமைந்திருக்கின்றது" என்றும் குறிப்பிட்ட இளந்திரையன், அரசாங்கத்தினதும், அதன் துணை இராணுவக் குழுவினதும் தவறான செயற்பாடுகளுக்கு சட்ட உரிமையைக் கொடுப்பதாகவே இந்தத் தேர்தல் அமைந்திருக்கின்றது" என்றும் குறிப்பிட்டார்.