மட்டக்களப்பில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை நிராகரிக்குமாறு வலியுறுத்தி இன்று முற்பகல் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவுக்கும் மனுவினை கையளித்திருக்கின்றது.
இராஜகிரியவில் உள்ள தேர்தல் திணைக்களத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இன்று புதன்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் ஆரம்பமாகியது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.தே.க. ஆதரவாளர்கள் பங்குபற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மட்டு. உள்ளுராட்சி சபை மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல்களை எதிர்க்கும் பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் நிறைவில் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது:
கிழக்கில் தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்ததை கருத்திலெடுக்காது அரசாங்கம் அந்த தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது. இத்தகைய தேர்தலின் மூலம் கிழக்கின் ஆட்சி அதிகாரத்தை ஆயுதக்குழுவுக்கு அரசாங்கம் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறது.
கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை விரட்டியதற்கு இன்று பலனில்லாது போய்விட்டது. ஒரு தரப்பிடம் இருந்து கிழக்கை மீட்டு விட்டு அதனை பிறிதொரு தரப்பிடம் அதுவும் ஆயுதக்குழுவான பிள்ளையான் குழுவிடம் இந்த அரசு கையளித்திருக்கிறது. அரசும், பிள்ளையான் குழுவும் இணைந்து இத்தேர்தலில் வன்முறைகளை அரங்கேற்றியுள்ளன. அதிகளவான ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் நாட்டின் அதிகாரத்தை தவறான பாதையில் கொண்டுசெல்ல இந்த அரசாங்கம் முற்பட்டுள்ளமை தெரிய வந்திருக்கிறது.
இந்நிலையில் கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அந்த தேர்தலும் இத்தகைய மோசடி மிக்கதாகவே இருக்கும். எனவே மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி தேர்தல் ஆணையாளருக்கு மனுவொன்றைக் கையளித்திருக்கிறோம்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். நாடு முழுவதும் இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம் என்றார்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, ஜோன்சன் பெர்ணாண்டோ, லக்ஸ்மன் செனிவிரட்ன, ஜோன் அமரதுங்க, திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மேலும் பலரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீர உட்பட அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.