கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு அனைத்துலக நாடுகள் உதவியளிக்க வேண்டும் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
கொழும்பில் உள்ள அனைத்துலக நாடுகளின் தூதுவர்களை சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் ரோகித போகல்லாகம இன்று புதன்கிழமை முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.
வெளிவிவகார அமைச்சகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பல்வேறு நாடுகளின் தூதுவர்களும் கலந்துகொண்டனர் என்று வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பில் மட்டக்களப்பில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்தும் கிழக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்தும் விளக்கியிருக்கும் அமைச்சர் ரோகித போகல்லாகம, கிழக்கின் அபிவிருத்திக்கு அனைத்துலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறார்.
இச்சந்திப்பையடுத்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்திய அமைச்சர் ரோகித போகல்லாகம அந்த மாநாட்டில் தெரிவித்துள்ளதாவது:
கிழக்கில் 14 வருடங்களுக்கு பின்னர் தற்போது உள்ளுராட்சி சபைத் தேர்தலை அரசு நடத்தியிருக்கிறது. இத்தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களித்திருக்கின்றனர்.
இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் நீரோட்டத்தில் இணைக்கும் முயற்சியில் அரசு வெற்றிகண்டு விட்டது. அடுத்து மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்.
மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்ட நிர்வாகம் அமுலுக்கு வந்தவுடன் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்வுத்திட்டத்தை மாகாண நிர்வாக சபை ஊடாக அரசு நடைமுறைப்படுத்தும்.
அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு குறிப்பாக கிழக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு அனைத்துலக நாடுகள் அனைத்தும் உதவியளிக்கும் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளன என்றார் அவர்.