வடக்கில் வாழும் வறிய தமிழ்க் குடும்பங்களின் நன்மை கருதி இலவச வைத்திய முகாம் ஒன்றை கடந்த 9 ஆம் திகதி இராணுவத்தினர் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை வடக்கின் கட்டளைத் தளபதி ஜீ.ஏ. சந்திரசிறி மேற்கொண்டார். விடத்தல்பளை, தவசிக்குளம், பாலாவி , உஸ்ஸான், உட்பட மற்றும் பல பிரதேசங்களில் இந்த வைத்திய முகாம் நடைபெற்றதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இராணுவத்தினரின் இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு அப்பிரதேசங்களில் உள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மீனவர் சங்கங்க உறுப்பினர்கள், மற்றும் கிராம சேவை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கினர்.
மூன்று இராணுவ வைத்தியர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்ட பல்வேறு நோயாளர்களுக்கு இங்கு மருத்துவ உதவிகளை வழங்கினர். நோயாளர்களுக்குத் தேவையான மருந்து வகைகள், உணவு மற்றும் குளிர்பானங்கள் என்பனவும் இங்கு வழங்கப்பட்டன. தமது நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள போதிய நிதி வசதியற்ற ஏழை மக்களே இந்த வைத்திய முகாம் மூலம் நன்மையடைந்துள்ளனர்.
போஷாக்கு உணவுப் பற்றாக்குறை காரணமாக இப்பிரதேசங்களில் வாழும் சிறுவர்களுக்கு தோல் வியாதிகள் ஏற்பட்டிருந்ததாகவும் அவர்களுக்கு உரிய கால நோய்த்தடுப்பு மருந்துகள் ஏற்றப்பட்டிருக்கவில்லை என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளர். இந்தச் சிறுவர்களுக்கும் இந்த வைத்திய முகாமில் உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் இப்பிரதேச தமிழ் மக்கள் இராணுவத்தினரின் மனித நேய நடவடிக்கைகளைப் பெரிதும் பாராட்டியதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் மேலும் தெரிவித்துள்ளது.