மொனராகலை மற்றும் புத்தள பகுதிகளில் இரண்டு தமிழ் குடும்பஸ்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த இரண்டுபிள்ளைகளின் தந்தையான செல்லமுத்து ஜெயகாந்தன் (29வயது) என்பர் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
இவர் சுற்றிவளைப்பு தேர்தலின்போது கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கூறி விசாரணைக்கென மொனராகலை பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மொனராகலை மாட்ட நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் இவரை பலாத்காரமாக ஏற்றிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று புத்தல பகுதியை சேர்ந்த தமிழ் குடும்பஸ்த்தர் ஒருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரும் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக பொலிஸாரினால் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த வாரம் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஞாயிறு தோறும் பொலிஸ் நிலையம் சென்று கையொப்பம் இட்டுவரவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் தனது தாய் மற்றும் மனைவியுடன் ஆட்டோவில் வீடு; திரும்பிக்கொண்டிருக்கையில்; இன்னுமொரு ஆட்டோவில வந்த ஆயுததாரிகள் இவர்களை இடைமறித்து தாயையும் மனைவியையும் வெளியில் தள்ளிவிட்டு கடத்திச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்திச்செல்லப்பட்டவர் கே.இராஜதுரை(32வயது) என்ற ஒரு பிள்ளைகளின் தந்தையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இப்பகுதில் கடந்த ஆட்டோ செலுத்திவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலையில் அண்மைக்காலமாக தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டவர்ளே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் இப்பகுதியில் அவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட ஐந்து பேர் ஆட்டோவில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களையடுத்து இப்பகுதியில் முப்படையினரும் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதானது இப்பகுதி தமிழ் மக்களை இப்பகுதியில் இருந்து விரட்டியடிக்கவே என தெரிவிக்கப்படுகின்றது.