17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அரசியலமைப்பு சபையை நிறுவுவது தொடர்பில் காணப்படுகின்ற சட்ட மற்றும் நிர்வாக முரண்பாடுகள் தீர்க்கப்பட்டதன் பின்னரே அரசியலமைப்பு சபை நிறுவப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய இயக்க உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பில் ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத்தை தோற்கடித்து அம்மாகாண மக்களுக்கு பெற்றுக்கொடுத்த வாக்குரிமையை வடக்கு மாகாண மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். வன்முறைகளற்ற தேர்தல் ஒன்றை கிழக்கில் நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த மக்களுக்கு தங்களது பிரதிநிதிகளை மாகாண சபைக்கு தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பமொன்றை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐக்கிய நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதர மாகாணங்களில் மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகளை கிழக்கு மாகாண மக்களுக்கு மட்டுமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பது சகலரினதும் பொறுப்பாகும்.
17 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வது தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து அங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியல் சபையை நிறுவுவது தொடர்பாக காணப்படுகின்ற சட்ட மற்றும் நிர்வாக முரண்பõடுகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையில் காணப்படுகின்ற சட்ட மற்றும் நிர்வாக முரண்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக நிறுவப்பட்டுள்ள ஆலோசனை சபையின் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டதன் பின்னர் அரசியலமைப்பு சபை நிறுவப்படும்.
பாராளுமன்ற அதிகாரம் மற்றும் பாராளுமன்ற முறையை சக்திபடைப்பதே எனது நோக்கமாகும். என்பதுடன் சகல பிரஜைகளினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மூடி மறைப்பதற்கு –அரசாங்கத்திடம் ஒன்றுமே இல்லை என்பதனாலேயே உலகத்திலேயே முதற்தடவையாக மனித உரிமைகள் தொடர்பாக கண்காணிப்பதற்கான குழுவொன்று இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.
ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய இயக்கத்தின் சார்பாக மாதுலுவாவே சோபித்த தேரர், விக்டர் ஐவன், குமார் ரூபசிங்க, மஹேந் தயானந்த, எல்மோ பெரேரா மற்றும் பாயிஸ் ரஹுமான் ஆகியோரே கலந்து கொண்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.