ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்கே இலங்கை முழுமையான ஆதரவளிக்கும். சீனாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கும், சர்வதேச, பிராந்திய ஒன்றியங்களில் இணைவதற்கும் தாய்வான் எடுக்கும் சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,
சீனாவிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுதல், ஐக்கிய நாடுகள் சபையில் தாய்வான் என்ற பெயரில் இணைதல் என்பவற்றுக்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த தாய்வான் திட்டமிட்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கின்றது.
இலங்கை அரசாங்கம் ஒரே சீனா என்ற கொள்கைக்கே ஆதரவளிக்கும் . பிரிந்து சென்று சுதந்திரமடைய தாய்வான் மேற்கொள்ளும் சகல வழியிலான முயற்சியையும் அரசாங்கம் கடுமையாக எதிர்க்கும்.
மக்கள் சீனக் குடியரசே சட்டபூர்வமான அரசாகும். தாய்வான் சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். தாய்வானின் இந்த முயற்சி ஐ.நா. பொதுச் சபையின் 2758 ஆவது சமவாயத்தின் 1971ஆவது பிரிவை தெளிவாக மீறும் செயலாகும்.