இலங்கை அரசு அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பிரிட்டிஷ் அரசை அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
"தமிழர்களுக்கான பிரிட்டனின் சர்வகட்சி நாடாளுமன்றக் குழுவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கே. சிவநேசனின் படுகொலையைக் கண்டித்துள்ள இக் குழுவினர், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகளைக் கண்காணிக்கும் பணியிலிருந்து சர்வதேசப் பிரமுகர்கள் அணி விலகியமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வன்முறைகள் பயங்கரமானவையாகவும், ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகளவானவையாகவும் காணப்படுகின்றன என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச சுயாதீன பிரமுகர்கள் அணி தனது நடவடிக்கைகளை நிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளமை மனித உரிமையைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுப்பதாக இலங்கை அரசு தெரிவிக்கும் விடயம் குறித்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என பிரிட்டனின் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச பிரமுகர்கள் குழு போன்ற ஒன்று இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதில் அர்த்தமில்லை எனத் தீர்மானித்துள்ளமை கவலையளிக்கின்றது என்றும் அந்த நாடாளுமன்றக்குழு தெரிவித்துள்ளது.பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரிடம் இலங்கை குறித்து எடுக்கக்கூடிய நடவடிக்கை எதுவெனத் தான் கோரவுள்ளதாகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.