சிவில், அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச பட்டயம் இலங்கையின் அரசமைப்புக்கும் ஏனைய சட்டங்களுக்கும் ஏற்புடையதா? இந்தச் சர்வதேசப் பட்டயத்தை இலங்கை ஏற்றுக்கொண்டால், இலங்கைச் சட்டங்களுக்கு முரண்படாத விதத்தில் அதை நடைமுறைப்படுத்த முடியுமா?''
இந்த விடயம் குறித்து ஆராய்ந்து, முடிவைத் தமக்கு அறிவிக்குமாறு உயர் நீதிமன்றத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.அரசமைப்பின் 129ஆவது பிரிவின் முதலாம் உப பிரிவின் கீழ் "ஆலோசனை நியாயாதிக்கம்' என்ற சரத்தின்படி இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறார்.மனித உரிமைகளை இலங்கையில் சிறப்பாகப் பேணுவதற்காக சர்வதேச குடியியல் (சிவில்), அரசியல் உரிமைகள் தொடர்பான பட்டயத்தை இலங்கை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மேற்குலக நாடுகள் வற்புறுத்திவருகின்றன.ஆடை ஏற்றுமதி உட்பட முக்கிய விடங்களில் இலங்கைக்கான வரிச் சலுகையைத் தொடர்வதற்கு இதை முன் நிபந்தனையாக அந்த நாடுகள் விதித்து அதற்குக் காலக்கெடுவும் கொடுத்துள்ளன.
ஆனால் ஏற்கனவே நாட்டின் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத சர்வதேச பட்டயங்களை நாட்டின் தலைமை அல்லது அரசு தம்பாட்டில் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தாலும் கூட, அவற்றைச் சட்டரீதியாக நடைமுறைப்படுத்த இயலாது என்று உயர்நீதிமன்றம் வேறு வழக்குகளில் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்தச் சூழ்நிலையிலேயே இந்தப் பட்டயத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள முன்னர், அது குறித்து உயர் நீதிமன்றத்திடமே கருத்துக் கேட்டு, நிலைமையைத் தெளிவு படுத்த ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.