சிறிலங்காவிற்கான உதவிகளை வழங்குவதற்கு முன்னர் அங்குள்ள நிலமையை ஆராய்ந்து பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறிலங்காவிற்கான உதவிகள் மற்றும் ஏற்றுமதி சலுகைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு முன்னர் அங்குள்ள நிலமைகளை அவதானிப்பதற்கு என்று மூவர் அடங்கிய குழு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியுள்ளது.
அலெக்சாண்டர் புளோகஸ் தலைமையிலான இந்த குழு கடந்த வாரம் சிறிலங்கா வந்தடைந்துள்ளதுடன் ஒரு மாதம் தங்கியிருந்து நிலமையை ஆராய்ந்து வருகின்றது.
எதிர்காலத்தில் சிறிலங்காவிற்கு வழங்கப்படவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள் மற்றும் ஏற்றுமதிச் சலுகைகள் போன்றவற்றிற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் பொருட்டு நாட்டின் நிலமைகளை ஆராய்ந்து வருகின்றோம் என்று அலெக்சாண்டர் புளோகஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவிகள் பயன்படுத்தப்பட்டன என்பது தொடர்பாக தொழில்துறை பிரதிநிதிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிவதே எனது நோக்கம். எமது குழுவினர் வர்த்த திணைக்களம், ஏற்றுமதித் திணைக்களம், தொழிற்சாலை வர்த்தக அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து சிறிலங்காவிற்கான ஜிஎஸ்பி ஏற்றுமதி சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து வழங்காது விடலாம் என்ற கருத்துக்கள் வலுவாக தோன்றியிருந்தன.
எனினும் இந்த சலுகைகளை மேலும் 3 வருடங்களுக்கு புதுப்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் தீர்மானித்திருந்தது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த சலுகைகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஏற்றுமதிகள் மூலம் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து சிறிலங்கா அரசு 2.9 பில்லியன் டொலர்களை சம்பாதித்திருந்தது.
சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் ஐ.நாவின் மனித உரிமை சபை கூட்டத்திலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டங்களிலும் ஏற்பட்டு வருவதுடன், சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானங்களை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் பல தடவைகள் முயற்சித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறிலங்காவின் அபிவிருத்தி மற்றும் முதலீட்டுதுறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகதுறை ஆணையாளர் பீற்றர் மன்டேல்சனுடன் சிறிலங்காவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி சலுகைகளை நீடிப்பது குறித்து பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.