சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 7 அவது கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறிலங்கா அரசு போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக முறித்துக்கொண்டாலும் எல்லாத் தரப்பினரும் அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விதிகளை மதிக்க வேண்டும் என்று கடந்த 7 ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக கண்காணிப்பாளர்களை சிறிலங்கா அரசு அனுமதிக்க வேண்டும் என்று அவரை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஸ்லோவேனியா (ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக), பிரான்ஸ், சுவிற்சலாந்து ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை பெருமளவான தொண்டர் அமைப்புக்களும் விமர்சனம் செய்து வருகின்றன.
இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போதல் போன்றவற்றை துன்புறுத்தல்கள் தொடர்பான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியும் கடந்த 10 ஆம் நாள் விமர்சனம் செய்திருந்தார்.
உலகில் மக்கள் காணாமல் போதல் தொடர்பாக இலங்கை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அது ஈராக்கையும் தாண்டி விட்டதாகவும் எழுந்தமானமாக மக்கள் காணாமல் போதல் தொடர்பான ஐ.நா.வின் செயற்குழு தெரிவித்துள்ளது.
செயற்குழுவின் இந்த அறிக்கையை தொடர்ந்து சிறிலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் சபையின் கண்காணிப்பாளர்களை அமைக்க வேண்டும் என்பதனை அவுஸ்திரேலியா, டென்மார்க், சுவிற்சர்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
சிறிலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் சபையின் கண்காணிப்பாளர்களை அமைப்பது அவசியமானது என்று தொண்டர் அமைப்புக்களும் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.