ஆங்கில செய்தி இணையத்தளமான அவுட்ரீச்எஸ்எல் உடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கவனம் செலுத்தியுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு பிரிவினரால் தாக்கப்படுள்ளனர். ஊடகவியலாளர்கள் தாக்கப்படமை தொடர்பாக தாம் கவனம் செலுத்தியுள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த மாதம் 6ஆம் திகதி ஈ-குவாலிட்டி அச்சகத்தின் உரிமையாளரும், எழுத்தாளருமான ஜெசிதரன் மற்றும் அவருடைய மனைவி வளர்மதி ஆகியோர் தகுந்த காரணங்களின்றி குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவருடைய மடிக்கணினி மற்றும் அச்சுக்கான ஆணவங்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன. ஜெசிதரன்
www.outreachsl.com எனும் இணையத்தளத்துக்கான எழுத்தாளராகவும் பணியாற்றிவந்தவர் என எல்லைகளற்ற ஊடக இயக்கம் மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு ஆகியன விடுத்துள்ள அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவுட்ரீச்எஸ்எல் இணையத்தளத்தின் ஆசிரியரான திஸாநாயகம் மற்றும் ஊடகவியலாளர் வி.ஜெசிகரன் ஆகியோர் கிழக்கே மாணவர்களிற்கு உதவும் பொருட்டும் , இணையத்தளத்தின் நிதி தேவைகளிற்காகவும் குறிப்பிட்ட தொகை பணத்தினை பெற்றுள்ளனர் என ஜேர்மன் அமைப்பான பிளிக்ட்(FLICT) சுதந்திர ஊடக அமைப்பிற்கு தெரிவித்துள்ளது
அதேவேளை கடந்த 7ஆம் திகதி குறிப்பிட்ட இணையத்தளத்தின் ஆசிரியரும், சுயாதீன ஊடகவியலாளருமான திஸநாயகம் என்பவர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இதனைவிட குறிப்பிட்ட இணையத்தளத்தின் ஊடகவியலாளர் விஜயசிங்க மற்றும் இணையத்தளத்தின் காண்பியத் தொகுப்பாளர் உதயனன், படப்பிடிப்பாளர் கயன் லசந்த ரங்க ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என ஊடக அமைப்புக்கள் கூறியுள்ளன.
மேலும் கடந்த 8 ஆம் திகதி சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர் எஸ்.சிவகுமார் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். ஏனையவர்கள் குற்றப்பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தியிருப்பதாக அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
சந்தேகத்துக்கிடமானவர்களைக் கைதுசெய்து விசாரணைசெய்யும் உரிமை பொலிஸாருக்கு இருக்கின்ற போதும் சட்டத்துக்கு உட்பட்பட்ட வகையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.