சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மட்டக்குளியில் இன்று மாலை ஏற்பட்ட குண்டுப்புரளியால் மக்கள் அல்லோகல்லோலப்பட்டனர்.
மட்டக்குளி முகத்துவாரத்தில் உள்ள வீதியோரத்தில் கிடந்த மர்மப் பொதி ஒன்றையடுத்தே இன்று வியாழக்கிழமை மாலை 3:20 மணியளவில் இந்த குண்டுப்புரளி ஏற்பட்டது.
குண்டுப்புரளியை அடுத்து சம்பவ இடத்திற்கு படையினர் பெருமளவில் விரைந்தனர். மர்மப்பொதி இருந்த பகுதிக்குச் சென்ற அனைத்து வீதிகளிலும் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டன.
இதனால் பேருந்துகளில் சென்ற மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டனர். பாடசாலை முடிந்து சென்ற மாணவர்களும் பயத்தினால் அங்கும் இங்குமாக ஓடினர். இதனால் பெரும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் மேற்படி மர்மப் பொதியை பிரித்து பார்த்தபோது அதற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் சில காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மக்கள் மத்தியில் நிலவிய குண்டுப்புரளி முடிவுக்கு வந்தது.
இதேவேளை வெள்ளவத்தையில் உள்ள கடை ஒன்றிற்குள் இன்று காலை 11:00 மணியளவில் வாடிக்கையாளர் விட்டுச் சென்ற பொதியாலும் அந்தப் பகுதியில் குண்டுப்புரளி நிலவியது.
காவல்துறையினரும் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வந்து மேற்படி பொதியை பிரித்துள்ளனர். எனினும் அந்தப்பொதிக்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இருக்கவில்லை என்று வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.