மறுசீரமைக்கப்பட்ட புதிய மின்கட்டணம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என சக்தி வள அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது:
இலங்கை மின்சார சபையின் நட்டங்களை ஈடுசெய்யும் வகையில் ஜனாதிபதியின் அனுமதியுடன் தயாரிக்கப்பட்ட கட்டண மறுசீரமைப்புக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது எதிர்வரும் ஜனவரி 15 முதல் அமுலுக்கு வருகிறது.
இதன்படி 90 அலகுகளுக்குக் குறைவான மின் பாவணையாளர்களுக்கு கட்டண அதிகரிப்பு இல்லை. அதற்கு மேலதிகமாகப் பாவிப்பவர்களின் மின்கட்டணத்துடன் 30 வீத எரிபொருள் கட்டணம் சேர்க்கப்படும். இதன் மூலம் வரிய மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள். எரிபொருள் விலை குறைக்கப்படும் போது அந்தக் கட்டணம் குறைக்கப்படும்.
மின் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து மக்களின் அபிப்பிராயத்தைக் தெரிந்துகொள்வதற்கான அறிவித்தல் கடந்த பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானி மூலம் விடுக்கப்பட்டது. இந்த அறிவித்தலுக்குப் பதிலளித்திருந்தவர்களில் 98 வீதமானனோர் கட்டணம் மறுசீரமைக்கப்படவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தனர். திறைசேரியுடனும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடனும் மின்சார சபை நடத்திய கலந்துரையாடலின் பின்னரே இந்த மறுசீரமைப்பு குறித்துத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த மின்சார கட்டணத்தின் மறுசீரமைப்பினால் வருடமொன்றுக்கு 44 பில்லியன் ரூபாவை மேலதிக வருமானமாகப் சபை பெறவுள்ளது. இந்த வருமானத்தினால் சபையின் வருடாந்தம் துண்டுவிழும் தொகை ஈடுசெய்யப்படுகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபைக்கு 138 பில்லியன் ரூபா மொத்த செலவு ஏற்பட்டுள்ளது. மின்சார சபைக்குக் கிடைக்கப்பெற்ற மொத்த வருமானம் 97 பில்லியன் ரூபாவாகும். சென்ற வருடம் மாத்திரம் 44 பில்லியன் ரூபா துண்டுவிழுந்துள்ளது.
எமது நாட்டின் மின்சாரம் இரு முறைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது. நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தில் 35 வீதமே நீரினால் உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சிய 65 வீதமும் டீசலைப் பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வருடம் டீசலைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதற்கு மாத்திரம் 109 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. உலக சந்தையில் ஒரு பெரல் மசகு எண்ணெய் 110 டொலர்களாக அதிகரித்துள்ளது.
அரசாங்கம் நாட்டில் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான செலவுகளுடன் மின்சாரத்துக்குத் தொடர்ந்தும் மானியம் வழங்கும் நிலையில் அரசு இல்லை. டீசலினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் ஒரு அலகிற்கு மூன்று ரூபா நட்டம் ஏற்பட்டது. இதனை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எமக்கு மானிய விலையில் வழங்கியது. சர்வதேச விலையேற்றங்களுக்கு மத்தியில் இந்த மானியத்தை வழங்க பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் மறுத்துள்ளது.
இந்த நிலையில் மின்சாரத்தைத் துண்டிக்காது தொடர்ந்தும் மக்களுக்கு வழங்க வேண்டுமானால் பொதுமக்கள் பாரியளவில் பாதிக்கப்படாமல் மின்கட்டணத்தில் மறுசீரமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தோம். இந்த கட்டண மறுசீரமைப்பினால் வரிய மக்கள் பெருமாளவில் பாதிக்கப்படாத அளவுக்கு அதனைத் திட்டமிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கேற்பவே இந்த கட்டண மறுசீரமைப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.(மு)