இலங்கையில் காணாமல் போனோரினது நிலை இன்னமும் புரியாத புதிராக நீடிக்கிறது என்று கனடிய ஊடகமான "நசனல் போஸ்ட்" தெரிவித்துள்ளது.
"நசனல் போஸ்ட்" வெளியிட்டிருக்கும் கட்டுரை:
இலங்கையின் வடக்குப் நகரமான வவுனியாவில் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் நாள் அன்ரன் சூசைப்பிள்ளை என்பவர் உந்துருளியிலிருந்து வீட்டிலிருந்து புறப்பட்டார்.
எனினும், அவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை.
மூன்று நாட்களுக்குப் பின்னர், அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இயங்கும் துணை இராணுவக் குழு- கட்டட நிர்மாண ஒப்பந்தக்காரரான சூசைப்பிள்ளையின் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினர்.
பத்திரமாக திரும்பி வரவேண்டுமானால் கப்பமாக பணம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்தனர்.
அவரது குடும்பத்தார் மூன்று மில்லியன் ரூபாவை தேடுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
எனினும் அவர்களால் குறித்த முழுத் தொகையையும் திரட்ட முடியாது போனது. திரட்டிய பணத் தொகையை வைத்துக்கொண்டு அவரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கடத்தல்காரர்களிடம் வேண்டிக் கொண்டனர்.
இறுதியில் அந்த வேண்டுதல் பயனற்றதாகவே போய்விட்டது.
அன்ரன் சூசைப்பிள்ளை உயிரோடு இருக்கிறாரா அல்லது உயிரோடு இல்லையா என்பது குறித்து தெரியவில்லை என்று அவரது மைத்துனர் அன்ரனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
இலங்கையில் மீண்டும் போர் ஆரம்பித்த கடந்த இரண்டு வருடங்களாக நூற்றுக் கணக்கானோர் காணாமல் போனோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
வீடுகளில் இருந்த போதோ அல்லது இராணுவ சோதனைச் சாவடிகளிலோ அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்றனர்.
2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை 1,500 காணாமல் போனவர்கள் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் இத்தகைய 99 சம்பவம் தொடர்பாக பதிவு செய்துள்ளது.
எனினும், இலங்கையில் இயங்கும் மனித உரிமை அமைப்புகள் பலநூறு பேர் காணாமல் போய் உள்ளதாகத் தெரிவிக்கின்றன.
சிலர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், பலர் பற்றிய தகவல்கள் இதுவரையில் புரியாத புதிராகவே நீடிக்கின்றது.
அநேகமான சந்தர்ப்பங்களில் இந்த சம்பவங்களுடன் சிறிலங்கா இராணுவத்திற்கு தொடர்புள்ளதாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சிறிலங்காவின் மனித உரிமை அமைப்புக்கள் முதலியன தெரிவிக்கின்றன.
கடத்தப்பட்டவர்களில் சிலர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களாகவோ அல்லது ஆதரவாளர்களாகவோ இருக்கலாம் எனினும், இதன் மூலம் உரிய நடைமுறைகளற்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களை நியாயப்படுத்த முடியாது என்று அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனவரி மாதம் 2 ஆம் நாள் அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கை அதிகாரபூர்வமாக இரத்துச் செய்யப்பட்டதாக அனைத்துலக கண்காணிப்பாளர்களுக்கு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து நாளாந்தம் வடக்குப் பகுதியில் அரசாங்கப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்கள், பேருந்து குண்டுத்தாக்குதல் மற்றும் அரசியல் படுகொலைகள் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கனடாவில் இந்த போரின் எதிரொலியை உணரக்கூடியதாக உள்ளது.
ரொறன்ரோவில் வசிக்கும் அநேகமானோரின் சொந்தங்கள் இன்னும் தாய் மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே இலங்கையின் நிலைமைகள் குறித்து கனடிய தமிழ்ச் சமூகம் மிக விழிப்புடன் காணப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதன் போது ரொறன்ரோவில் கொட்டும் மழையிலும் மக்கள் அணி திரண்டு வணக்கம் செலுத்தினர்.
கனடிய தமிழர்களின் செயற்பாடுகள் குறித்து கனடிய புலனாய்வுப் பிரிவினர் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
தாய்நாட்டில் வசிக்கும் எமது சொந்தங்கள் பற்றி நாங்கள் மிக உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக கனடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
பச்சை, தேயிலை விளையும் செழிப்பான தாய் மண்ணில் தற்போது கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் படுகொலைகள் இடம்பெறுவதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தின் மூலம் இந்த செயற்பாடுகளுக்கு இராணுவத்தினருக்கு வழிவகைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரையில் படைத்தரப்பில் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் 2008 ஆம் ஆண்டில் இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று அனைத்துலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.