உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்ற இந்த தருணத்தில் எக்காரணத்தைக் கொண்டும் தேசிய சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என்று பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வள அமைச்சர் ஏ. எச்.எம். பௌசி தெரிவித்தார். நுகர்வோர் அறியாத வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. 10 வீத விலைக் கழிவில் எரிவாயு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் சொன்னார்.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் பௌசி மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது:
உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரித்து செல்கின்றன. இது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருக்கின்றது. இந்நிலையில் தேசிய சந்தையில் எரிபொருள் விலை பிரச்சினையே எம்மத்தியில் இருக்கின்றது. எம்மிடம் இருக்கின்ற எரிபொருள் சேமிப்புக் குதங்களில் ஒன்றரை முதல் இரண்டு மாதங்கள் வரையான காலப்பகுதிக்கு தேவையான எரிபொருளையே சேமித்து வைக்க முடிகின்றது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும்போது உள்நாட்டிலும் அதன் அதிகரிப்பு தவிர்க்க முடியாததாகும். ஆனாலும், இம்முறை தேசிய சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எரிபொருளின் விலையை அதிகரித்து மக்களைப் பாதிப்படையச் செய்யும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை. எனவே, எரிபொருள் சேமிப்பகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு கடந்த காலங்களிலும் பார்க்க அதிகளவு எரிபொருளை சேமித்து வைப்பதற்கான திட்டங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
நுகர்வோரை பாதிக்காத அதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இலாபம் பெறவேண்டும் என்பதே எமது அடிப்படை நோக்கமாகும். கடந்த ஜனவரி மாதம் எரிபொருளுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டன. அதன் பின்னர் இதுவரை எதுவித விலை அதிகரிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த விலை அதிகரிப்பின் மூலம் மண்ணெண்ணெய் லீற்றர் 70 ரூபாவும், டீசல் லீற்றர் 80 ரூபாவும் ஆக விற்கப்படுகின்றன.