டீசலின் விலை அதிகரிப்பினால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்படுகின்ற நட்டத்தை நிவர்த்தி செய்துகொள்வதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் முதல் 90 அலகிற்குள் மின்சாரத்தை பாவிப்போருக்கான மின்சார கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது. 90 அலகிற்கு மேல் மின்சார கட்டணம் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மின்சக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
பொதுமக்களின் ஆலோசனைகளின் பிரகாரமே மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணம் நாளை 15 ஆம் திகதி முதல் அமுல் படுத்தப்படும் எனினும் 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது போல மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்றும் அவர் சொன்னார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;
இலங்கை மின்சார சபைக்கு 2008 ஆம் ஆண்டு மொத்த செலவு 138 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார கட்டண அறவீடுகளிலிருந்து 94 பில்லின் ரூபா கிடைக்கும் மிகுதியாவுள்ள 44 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகின்றது.
இந்த 138 பில்லியன் ரூபாவில் 109 ரூபா டீசலுக்கு வழங்கப்பட்டுகின்றது. கிடைக்கின்ற வருமானமான 94 பில்லியன் ரூபாவை கழித்தால். 15 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்படுகின்றது இவற்றை நிவர்த்தி செய்துக்கொள்வதற்காகவே மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆலோசனைகளின் பிரகாரம் 98 வீதமானோர் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன்பிரகாரம் 90 அலகிற்கு குறைந்தளவான மின்பாவனையாளருக்கு முடியுமான அளவு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.