அரசின் துணைப்படையாக இயங்கும் பிள்ளையான் குழு கிழக்கு மற்றும் பொலன்னறுவையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள வர்த்தகர்களைக் கடத்திக் கப்பம் பெற்று வருகின்றது என்று ஐ.தே.கட்சியின் முன்னாள் எம்.பியும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான எஸ்.பி.திஸநாயக்க நேற்றுக் கூறினார்.
அத்தோடு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடக்கூடிய ஜனநாயக நிலைமையை அங்கு ஏற்படுத்தித் தருமாறும் அவர் அரசிடம் வேண்டுகோளும் விடுத்தார்.நேற்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:பிள்ளையான் குழு அரசின் துணைப்படை என்பதில் சந்தேகம் இல்லை. பொலன்னறுவை இராணுவ முகாம்களுக்கு மத்தியில்தான் பிள்ளையான் குழுவின் முகாம்கள் உள்ளன.இக்குழு பொலன்னறுவையிலும் கிழக்கிலும் தமிழ், முஸ்லிம், சிங்கள வர்த்தகர்களைக் கடத்திக் கப்பம் பெற்றுவருகின்றது.
பொலன்னறுவையில் பிள்ளையான் குழுவால் கடத்தப்பட்ட சிங்கள வர்த்தகர் ஒருவரை மீட்பதற்காக எமது எம்.பியான ஏர்ள் குணசேகரா பிள்ளையான் குழுவிற்குப் பணம் கொடுக்கவேண்டிய நிலைக்கு உள்ளானார்.
இவ்வாறானதொரு குழுவுடன் இணைந்துதான் அரசு தேர்தலில் போட்டியிட்டது. ஐ.தே.கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளைப் போட்டியிடவிடாமல் அக்குழு மிரட்டிவந்தது.நாம் மட்டு. உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்று தீர்மானிப்பதற்கு முன்பே மட்டக்களப்பில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் போட்டியிடத் தயாராகின. அவர்களின் வீடுகளு“குச் சென்ற பிள்ளையான் குழு அவர்களைப் போட்டியிடவேண்டாம் என்று மிரட்டியது.ஈ.பி.டி.பியினரைக் கூட பிள்ளையான் குழு மிரட்டியது. பாரிய வன்முறைகளில் ஈடுபட்டு இப்போது அரசின் துணையுடன் வெற்றியும் பெற்றுள்ளது.கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் போட்டியிடத் தயாராகவே உள்ளோம். ஆனால் அங்கு எல்லோரும் போட்டியிடக்கூடிய ஜனநாயக நிலையை அரசு உருவாக்கித் தரவேண்டும் என்றார் அவர்.