யாழ்.குடாநாட்டில் கோதுமை மாவின் விலை தனியார் கடைகளில் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 90 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கோதுமை மாவின் விலையை அரசாங்கம் அதிகரிக்கவுள்ளது என்ற செய்தி வெளிவரத் தொடங்கியதையடுத்து யாழ். குடாநாட்டு பல நோக்கு கூட்டுறவுச்சங்கங்களிலிருந்து கோதுமை மா தனியார் வர்த்தக நிலையங்களுக்கு கடத்தப்படுவதாக யாழ். கூட்டுறவுத்திணைக்களத்திற்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாக கோதுமை மா விற்பனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுச்சங்கங்களில் உள்ள மாவின் கையிருப்பு கணக்கு எடுக்கப்பட்டதும் பாவனையாளர்களுக்கு கோதுமை மா விநியோகம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாக கோதுமை மா விற்பனை இடைநிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மாவினைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார்கள். இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் கிலோ 81 ரூபாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட மாவினை தனியார் கடைகளில் 90 ரூபா முதல் 100 ரூபாவரை விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.