இலங்கையின் மனித உரிமைகளின் நிலைவரம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் இவ்வாரம் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபட் ஓ பிளேக்குடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது, அமெரிக்க இராஜங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் நாட்டின் சமகால நிலைமைகளை பிரதிப்பலிப்பதாக அமையவில்லை என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இராஜங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு உரிய விளங்கங்களுடன் விரிவான பதில் அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் போகொல்லாகம அமெரிக்க தூதுவரிடம் கூறியுள்ளார். இதேவேளை, வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு மிகவும் ஆரோக்கியமானதாக அமைந்ததாக தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் றொபட் ஓ பிளேக், நாடுகள் மனித உரிமைகளின் நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அமெரிக்க நாடுகளில் மனித உரிமைகளின் நிலை குறித்து வருடாந்த அறிக்கை வெளியிடுவதாக கூறியுள்ளார்.
அத்தோடு, இராஜங்க திணைக்களத்தின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் வெளியிடவுள்ள பதில் அறிக்கையை தாம் வரவேற்பதாக கூறியுள்ள அமெரிக்க தூதுவர் இவ்விடயம் குறித்து தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.