இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டாரவை பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் இலங்கையின் பாராளுமன்ற முறைமை, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து பாராளுமன்ற தூதுக் குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். அதுமட்டுமல்லாது இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள செனட் சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரசிங்க மற்றும் பாரளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் சில பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பாராளுமன்றத்தில் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டாரவுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து சபாநாயகரினால் வழங்கப்பட்ட பகல்போசனத்திலும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவினர் கடந்த வருடம் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இரு நாட்டு தூதுக்குழுவிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே பாகிஸ்தான் செனட் சபை உறுப்பினர்கள் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.