அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற அனைத்து இலங்கை ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் குழுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் கலந்து கொண்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கட்சிச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அரசு முன்வைத்துள்ள தீர்வுத் திட்டம் தொடர்பாக சந்திரிக்கா குமாரதுங்க கேள்வியெழுப்பினார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தமே தீர்வுத் திட்டமாக முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்த போது, இந்தப் பிரச்சினைக்காக ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னர் முன் வைக்கப்பட்டதே 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தமெனவும் தற்போதைய அரசு முன்வைத்துள்ள தீர்வுத் திட்டம் என்பதை எழுத்து மூலம் அறிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
எனினும், இந்தக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் ஏனைய உறுப்பினர்களை 13 ஆவது திருத்தச் சட்டமே இனப் பிரச்சினைத் தீர்வாக முன் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவர்கள் அனைவரையும் அதற்கு ஆதரவாக கை உயர்த்த வைத்து அதற்கான ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இங்கு வெளிப்படுத்தினார்.
எனினும், எழுத்து மூலம் அரசால் இதுவரை தீர்வுத் திட்டம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லையென்பதை சந்திரிக்கா குமாரதுங்க மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.