இந்த உதவிகளின் மூலம் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக இந்திய அரசாங்கம் அதிக சிரத்தை காட்டுவதில்லை என்று வெளிக்காட்டிக்கொள்ள இந்தியா விரும்பவில்லை.
எனினும் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த அழுத்தங்கள் மற்றும் வெறுப்பின் வெளிப்பாடாகவே விடுதலைப் புலிகள் அண்மையில் இந்தியாவிற்கு அனுப்பியுள்ள அதிகாரபூர்வ அறிக்கை கருதப்படுகிறது.
ஏனைய பயங்கரவாத அமைப்புக்களைப் போலவே விடுதலைப் புலிகளும் அநேகமான சந்தர்ப்பங்களில் அதிகாரபூர்வ அறிவித்தல்களை தவிர்த்து வந்தனர்.
மிகவும் இன்றியமையாத சூழ்நிலைகளின் போதே அவர்கள் அதிகாரபூர்வ அறிக்கைகளை வெளியிடுவர். இந்த வகையில் இந்தியாவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையின் மூலம் இந்த நிலைமையின் முக்கியத்துவம் நன்கு புலனாகிறது.
இந்தியாவின் புலனாய்வு நடவடிக்கைகளை மீளமைத்துக் கொள்வது மிகவும் உசிதமானதொன்றாகக் கருதப்படுகிறது.
இந்தியர்கள் மீதோ அல்லது முக்கிய இலக்குகள் மீதோ விடுதலைப் புலிகள் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும். விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ அறிக்கையை ஒரு சாதாரண கோபத்தின் வெளிப்பாடாகக் கருதி புறக்கணித்தால் அது பெரிய முட்டாள்த்தனமாக அமையக்கூடும்.
அண்மைக்காலத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், விடுதலைப் புலிகளின் கடல்வழித் தொடர்புகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
உதாரணமாக கேரள மாநில காவல்துறையினருடன் இணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் குறிப்பிடலாம்.
அநேகமான சந்தர்ப்பங்களில் உள்நாட்டு மக்களின் உதவியுடனேயே விடுதலைப் புலிகள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் பணத்திற்காகவோ அல்லது உணர்வின் காரணமாகவோ விடுதலைப் புலிகளுக்கு கணிசமான அளவு ஆதரவு இந்தியாவில் காணப்படுகிறது என்பதனை மறுப்பதற்கில்லை. எனினும், விடுதலைப் புலிகள் மீது அனுதாப அலைகள் தொடர்ந்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இருவேறு நோக்கங்களுக்காக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம் என்பன விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றன.
பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதனையும்,
பயங்கரவாத கட்டுப்பாட்டு நடவடிக்கையில் தாம் இன்றும் சோபை இழக்கவில்லை என்பதனைக் காட்டிக் கொள்வதற்காகவும் இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது.
பயங்கரவாத அமைப்பு ஒன்றை இல்லாதொழிக்க வேண்டும் என்பதுவும்,
சிங்களப் பெரும்பான்மையினரின் அபிலாசைகளை தமிழ்ச் சிறுபான்மையினரின் மீது பலவந்தமாக திணிக்க வேண்டும் என்பதுவுமே சிறிலங்காவின் பிரதான குறிக்கோள்களாகும்.
எவ்வளவு இனிமையான வார்த்தைகளை மகிந்தவும் அவரது அதிகாரிகளும் பேசினாலும், உண்மையில் தமிழ்ச் சிறுபான்மையினர் மீது தமது சர்வாதிகாரத்தை அரங்கேற்றுவதே பிரதான இலக்காக காணப்படுகின்றது.
இந்த இரண்டு நாடுகளும் ஒரே நோக்கத்திற்காகவே நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன என்ற தோற்றத்தை ஏற்படுத்த இந்தியா ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்று பி.இராமன் தெரிவித்துள்ளார்.