சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் விரிசல் விழுந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த வாரம் அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பில் மிகவும் காட்டமான அறிக்கைகளை கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
மேலும் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கை அழைத்து தமது அதிருப்திகளை ரோகித போகல்லாகம வெளியிட்டுள்ளதுடன், அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு ஈராக் நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவி அமைப்பு வெளியிட்ட அறிக்கை மிகப்படுத்தப்பட்டது என்று அன்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. எனவே நாமும் அமெரிக்காவின் அறிக்கை தொடர்பில் அதே போன்ற நிலைப்பாட்டையே தெரிவிக்கின்றோம் என்று மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்கா தனது அறிக்கை தொடர்பாக உறுதியாகவே உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.
"எமது நோக்கம் 196 நாடுகளில் ஏற்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிப்பதே. அது எப்போதும் நியாயமானதாகவே இருக்கும்" என்று அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.