இலங்கை மண் ஈழத்தமிழரின் ஆதி வரலாற்றையும் அந்தவராலற்றை உருவகித்து நிற்கும் இலங்கை மன்னன் இராவணனினது ஆட்சிச்சிறப்பையும் அவனது வீரத்தையும் உலகிற்கு அறிமுகம் செய்துவைக்கின்றது எனத் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
பொன்.கணேசமூர்த்தி அவர்களின் இலங்கை மண் நாடகநூலுக்கு வழங்கிய வாழ்த்துரையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் விபரம் வருமாறு.
“மனிதகுல வரலாற்றில் மனிதர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்திசைவாக ஒருபோதும் இருந்ததில்லை. மனிதன் குடும்பமாக, குழுவாக, இனக்குழுவாக வாழ்ந்தநாளில் இருந்து அவனுக்குள் முரண்பாடுகள் தலைதூக்கின அவைமுற்றி மோதல்களாக வெடித்தன.
அனைத்தையும் ஆளவேண்டும் என்ற ஆசை அவனிடம் பிறந்தது. மனிதனே மனிதனுக்கு விரோதியாக மாறும் விந்தை நிகழ்ந்தது. தாம் சாராத பிறரை எதிரியாகக் கண்டான் அவர்களை தீண்டத்தகாதோராக விலக்கி வைக்கமுயற்சித்தான் மனிதகுல விரோதியாக, கொடியோராக, கொடுமைக்காரராக, மனிதரே அல்லாத அரக்கராக முத்திரைகுத்தி பொய்யான கதைகள் கட்டினான்.
காலம் காலமாக கட்டியெழுப்பப்பட்ட அவர்களது வாழ்க்கைமுறைகளையும், பண்பாட்டுக்கோலங்களையும் ஈவிரக்கமின்றி சாடினான் அவர்களை அடியோடு அழிப்பதே தர்மம் என போதனைவேறு செய்தான்;. கடவுள் கோட்பாட்டை துணைக்கு அழைத்து தன்னை தெய்வ அவதாரமாகக் காட்டிக்கொண்டான். இப்படியாக இன்னொருவரது அழிவில், இன்னொருவரது வெற்றியில் புதியவரலாறு எழுதப்பட்டது.
உண்மை வரலாற்றைப் குழிதோண்டிப்புதைத்துவிட்டு, பொய்களையும் புளுகளையும் புகுத்திப் புதிய வரலாறு வெற்றிபெற்றமனிதனுக்கு சார்பாக எழுதப்பட்டது.
சூதுகளையும் சூழ்ச்சிகளையும் செய்து கோழைத்தனமாக, வஞ்சகமாக எதிரியைக் கொன்ற அசிங்கம் அதில் சொல்லப்படவில்லை. உண்மைவரலாறு இறந்தவர்களின் புதைகுழிகளின் இருளுக்குள் அப்படியே அடங்கிப்போனது. இதேகதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது.
அன்றைய போர்விதிமுறைகளுக்கு மாறாக மிகவும் கபடமான வழியில் தமிழ்மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு உண்மைக்கு புறம்பான, முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாக செய்யப்பட்ட வரலாற்று திரிவில் தமிழரின் பண்டைய வாழ்வு இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
தலைகீழாக திரித்துவிடப்பட்ட இந்த வரலாற்றின் தாக்கம் 21ஆம் நூற்றாண்டிலிலும் முடிவுறவில்லை. இன்னமும் அது இலங்கை மண்ணை ஆட்டிப்படைக்கிறது. இலங்கைத்தீவின் அரசியல் முகத்தையும் அது சிதைத்துவிட்டிருக்கிறது. சிங்கள இனம் வழிதவறிச்சென்று சிங்கள மண்ணிலேயே தமிழர் காலம் காலமாக அடிமைகளாக அவலமான வாழ்வுவாழவும் நிர்ப்பந்திக்கப்படுகிறது.
இவ்வாறு இன்று கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்ட மாமனிதர் அமரர் பொன்.கணேசமூர்த்தி எழுதிய “இலங்கை மண்” நாடகநூலிற்கு தமிழீழத்தேசியத்தலைவர் வழங்கியுள்ள வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.
இவ்வெளியீட்டு நிகழ்வு முற்பகல் 10.00 மணிக்கு தமிழீழக் கல்விக்கழகப் பொறுப்பாளர். வெ.இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றினார். பொதுச்சுடரினை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்தியாகம் ஏற்றினார். மேடையில் வைக்கப்பட்டிருந்த “இலங்கை மண்” நூலாசிரியர் அமரர் பொன்.கணேசமூர்த்தியின் திருவுருவப்படத்திற்கு விடுதலைப்புலிகளின் மூத்தஉறுப்பினர் க.வே.பாலகுமாரன் சுடர் ஏற்றினார்.
திரு. வெ.இளங்குமரனின் தலைமையுரையினைத் தொடர்ந்து வெளியீட்டு உரையினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர். நா.தமிழன்பன் நிகழ்த்தினார். நூலினை போராளி அன்புச்செல்வன் வெளியிட மருத்துவப்பிரிவைச்சேர்ந்த போராளி தேவா அன்ரி பெற்றுக்கொண்டார். தமிழீழத் தேசியத்தலைவரின் வாழ்த்துரையை போராளி அன்புச்செல்வன் மேடையில் வாசித்தார்.
நூலின் முதற்பிரதியை அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் வழங்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன. நூலின் மதிப்பீட்டுரையை படைய மொழியாக்கற் பிரிவுப்பொறுப்பாளர் திரு.யோகி அவர்கள்நிகழ்த்தினார். சிறப்புரையினை தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாள நடேசன் நிகழ்த்தினார்.
இந்நிகழ்விற்கு பெருமளவிலான பொதுமக்கள், போராளிகள், வருகைதந்திருந்தனர்.