சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க (வயது 59) கொழும்பில் இன்று மரணமடைந்தார்.
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க - சிறிமாவோ தம்பதியின் மகனும் சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவின் சகோதரரும் ஆவார் அனுரா.
ஈரல் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், கடந்த மாதம் முதல் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:45 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.
1949 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் நாள் பிறந்த அனுரா பண்டாரநாயக்க, கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
அங்கிருந்து சிறிலங்காவிற்கு மீண்டும் திரும்பிய, அவர் மொறட்டுவ தொகுதியில் போட்டியிட்டு 1977 நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
1983 முதல் 1988 ஆம் ஆண்டுவரை எதிர்க்கட்சித் தலைவராக அவர் பதவி வகித்தார்.
1993 ஆம் ஆண்டு உயர்கல்வி அமைச்சராகவும், 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சபாநாயகராகவும் அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சராகவும் 2004 இல் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் முன்னாள் அரச தலைவரும் அனுரா பண்டாரநாயக்கவின் சகோதரியுமான சந்திரிகாவிற்கும் இடையில் ஏற்பட்ட முறுகலையடுத்து மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடனும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமை மீதும் அவர் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
இறுதியாக நடந்த மகிந்த ராஜபக்சவின் வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பிலும் அவர் பங்கேற்காமல் எதிரணிப் பக்கம் தாவினார்.
இந்நிலையிலேயே அவர் ஈரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.