சிறிலங்கா அரசின் படுகொலைகளையும், அடக்குமுறைகளையும் கண்டித்து சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 17ஆம் நாள் திங்கட்கிழமை சுவிற்சர்லாந்தில் கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது.
மதியம் 1.30ற்கு ஜெனீவா பிரதான பூங்காவில் ஆரம்பிக்கவுள்ள கண்டனப் பேரணி, ஐக்கிய நாடுகள் சபையில் முடிவடைந்து, அங்கு மனுக் கையளிப்பும், பொதுக் கூட்டமும் இடம்பெறவிருக்கின்றது.
இந்த கண்டனப் பேரணியிலும், பொதுக் கூட்டத்திலும் தமிழ் அமைப்புகளுடன், சிங்கள அமைப்புகளும், அனைத்துலக மனிதநேய அமைப்புகளும் கலந்து கொள்ள இருக்கின்றன.
இதேவேளை, ஜேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற கண்டனப் பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
டுசுல்டோர்ப் பிரதான தொடரூந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த பேரணி நாடாளுமன்ற முன்றலில் முடிவடைந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள், தமிழ் மக்கள் மீதான வான்வழித் தாக்குதல்கள், சிறீலங்கா அரசின் ஊடக அடக்குமுறை, மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவற்றைக் கண்டித்து பேரணியில் கலந்து கொண்டோர் பாதாதைகளைத் தாங்கியிருந்ததுடன், துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
இதற்கு முன்னதாக, கடந்த வியாழக்கிழமை மதியம், மாமனிதர் கிட்டினன் சிவனேசனின் படுகொலையையும், சிறீலங்கா அரசின் ஏனைய படுகொலைகளையும் கண்டித்து நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றிருந்தது.
நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கண்டன ஒன்றுகூடலில், தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள படுகொலைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டது.