மோசமடைந்து வரும் இலங்கை நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகச் செயற்பட வேண்டும் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையப் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 7 ஆவது கூட்டத்தொடரில் அவர் பேசியதாவது:
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அரங்கங்களிலும் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்திலும் கடந்த இரு தசாப்த காலமாக சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டவைகளை கவனமாக வாசித்துப் பார்த்தால், "இந்த உண்மைகள் தொடர்பில் ஏன் அனைத்துலகம் அமைதி காக்கிறது?" என்ற கேள்வி வெளிப்படுகிறது. சிறிலங்கா நியாயமற்ற வாதங்களை முன்வைக்கின்ற போதெல்லாம் அனைத்துலகம் மிகவும் அமைதியாக இருக்கிறது.
பல சிறப்புப் பிரதிநிதிகள் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். பல்வேறு நிறுவனங்களும் இலங்கை தொடர்பிலான உண்மை நிலைமைகளை அறிக்கைகளாக வெளியிட்டுள்ளன.
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பல சிறப்புப் பிரதிநிதிகளின் பயணங்களை அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டியும் இருக்கின்றன. ஒரு சில பிரதிநிதிகள் இலங்கையின் உண்மை நிலைமைகளை வெளிப்படுத்தியமையால் "பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்" என்ற பெயரோடு திரும்பியும் இருக்கின்றனர்.
மேலும் மோதல் நிகழ்ந்து வரும் பகுதிகளுக்குச் சென்று அங்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதனைப் பார்வையிட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட பல ஐ.நா. அதிகாரிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மோதல் நிகழ்ந்து வரும் பகுதிகளில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்களின் நிலைமை மிகவும் மோசமானதாக கவலையளிக்கக்கூடியதாக உள்ளது.
மனித உரிமை பாதுகாப்பாளர்கள்- சட்டத்தரணிகள்- நாடாளுமன்ற உறுப்பினர்கள்- கல்வியாளர்கள்- சமூக சேவையாளர்கள் எனப் பலரும் "அடையாளம் தெரியாத ஆயுததாரிகள்" என்று அழைக்கப்படுவோரால் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் கூட, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதல் மூலம் படுகொலை செய்துள்ளனர்.
இருப்பினும் எந்த ஒரு மனித உரிமைப் பாதுகாப்பாளர்களின் படுகொலைகளிலும் எந்த ஒரு முறையான விசாரணையுமே இன்று வரை நடத்தப்படவில்லை.
2006 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 62 மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உண்மை நிலைமைகளை உலகுத்துக்கு வெளிப்படுத்துகிற பல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது.
மார்ச் 6 ஆம் நாள் அனைத்துலக சுயாதீன வல்லுநர்கள் குழுவினர் சிறிலங்காவிலிருந்து வெளியேறியுள்ளனர். சிறிலங்கா தொடர்பில் அதற்கு முன்னர் பல்வேறு அறிக்கைகளை அக்குழு வெளியிட்டிருந்தாது.
2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து கடந்த ஜனவரியில் சிறிலங்கா தன்னிச்சையாக விலகிக் கொண்டது.
இதனால் போர் நிறுத்த மீறல்களைக் கண்காணித்து வந்த நோர்டிக் நாடுகளின் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் இலங்கையிலிருந்து வெளியேறியது.
இப்போது போர் நடைபெற்று வருகிறது. இலங்கையின் நிலைமை மிக மோசமடைந்து வருகிறது.
ஆகையால் இலங்கை நிலைமைகள் குறித்து ஆராய்ந்து சாத்தியமான அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார் கிருபாகரன்